மழையோடு விளையாடி...

நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
கொளுத்தும் வெயிலில்
மழை பெய்தாலும்
நனையவும் வேண்டும் ஒரு மனம்...

'மழை வருது உள்ள போ'
அம்மாவின் குரலுக்கு பின்
வெளியே ஓடி
மண் வாசனையுடன்
முதல் துளியில் நனைந்து...

நின்ற மழையின்
வரும் வெள்ளத்தில் விளையாடி
சேரும் சகதியுமாய் திரும்பி
அம்மாவிடம் அடிவாங்கினாலும்
மழையை வெறுத்திட
நினைக்காத மனம்.


முடியாத தருணங்களிலும்
விழும் மழையை ரசித்து
மகிழ்ச்சி கொண்ட மனம்

கொளுத்தும் வெயிலில்
மழைக்காக வருத்தப்பட்டாலும்
எப்போதாவது பெய்யும் மழையிலும்
நனைந்திட துணிந்ததில்லை மனம்.

பேருந்து நிழற்குடையோ
உயர்ந்து நிற்கும் கட்டிடமோ
அலுவலக கண்ணாடி ஜன்னலோ
எங்கேனும் ஒளிந்து கொள்ளவே ஓடுகிறேன்.
நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
நனைய நினைப்பதில்லை மனம்.

ஜோதிடமும் - தீபாவளியும்

நாம இண்டர்நெட், ஈ-மெயில் அப்படினு எவ்ளோ வேகமா முன்னேறி போயிட்டு இருந்தாலும்
சில விசயங்களில் நம்ம நம்பிக்கைய மாத்திக்க முடியாது. அப்படிதான் ஜோதிடமும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து படிப்பு, தொழில், திருமணம், குழந்தைகள் அப்படினு ஒவ்வொரு கட்டத்திலையும் ஜோதிடம் பார்ப்போம்.

இந்த ஜோதிடம் தனி மனிதர்கள் தவிர்த்து தொழில் தொடங்குவது, வேலைவாய்ப்பு மட்டுமில்லாம ஒரு நாட்டுக்கே கூட ஜோதிடம் உண்டு.

ஒரு சிலர் இத மூடநம்பிக்கை அப்படினு சொன்னாலும் இதை பலர் நம்பிக்கையாதான் நினைக்கிறாங்க. சில சமயங்கள்ல வியாபாரிங்க தங்கள் தொழிலுக்கு இதையே சாதகமா பயன்படுத்தி சில விசயங்கல திரிச்சி விடுறதும் உண்டு.

கொஞ்ச நாளைக்கு(சில வருடம்) முன்பு பச்சை கலர் புடவைல ஒரு புரட்சி நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அதாவது அண்ணன்/தம்பி எல்லோரும் தன் உடன் பிறந்த அக்கா/தங்கை களுக்கு பச்சை கலர் புடவை எடுத்து கொடுக்கனும். இல்லைனா தோஷம், அவங்க(அண்ணன்/தம்பி) உயிர்க்கு ஆபத்துனு கெளப்பி விட்டுட்டாங்க. நாடே பச்ச பச்சனு அல்லோலப்பட்டு போங்க. என் உயிர்தான் போன போயிட்டு போகுதுனு சொன்னாகூட விடமாட்டோம்னு வாங்கிட்டு தன் பாசத்த காட்டின அக்கா தங்கைகள் உண்டு.

அடுத்து இந்த அட்சய திதில தங்கம் வாங்கினா தங்கம் பெருகுமாம். இது யார் கிளப்பி விட்டதுனு தெரியல. இந்த அட்சய திதி அன்னிக்கு கணவனோட பாடு எல்லாம் திண்டாட்டம் தான். சோத்துக்கே காசு இல்லைனாலும் அன்னிக்கு தங்கம் வாங்கியே ஆகனும்னு நிப்பாங்க. வாங்கி கொடுக்கலைனா அப்புறம் சோத்துக்கு திண்டாட்டம் தான் அதனால அவனும் எங்காவதும் கடன வாங்கியாவதும் கடைக்கு கூட்டிட்டு போவான். இங்க காசு கொஞ்சம் தான் இருக்குனு எதாவது சின்னதா வாங்கிகிட்டு கடைய ஒரு ரவுண்டு விட்டு என்னென்ன இருக்குனு பாத்துட்டு வந்துட வேண்டியது. ஒரு மாதத்துக்கு அப்புறம் நான் அன்னிக்கு போனப்போ ஒரு டிசைன் பாத்தேன் அது நல்லா இருந்துச்சி வாங்கிகொடுங்க வாங்கிகொடுங்கனு உசுர எடுக்க வேண்டியது. அவனும் பாவம் எத்தன நாளைக்கு தான் சமாளிக்கிறது. காலைல ஆபிஸ் கெளம்பும் போது ஒரு தடவ சொல்ல வேண்டியது. அப்புறம் மதியம் போன் பண்ணி சொல்ல வேண்டியது. நைட் ஆபிஸ்ல இருந்து வந்ததும் சொல்ல வேண்டியது. பொறுத்து பொறுத்து பார்த்துட்டு முடியலடா இவ தொல்லை அப்படினு எப்படியாவது அத வாங்கி கொடுப்பான். அதுக்கப்புறம் சொல்வாங்க பாருங்க ஒரு டயலாக். அதாங்க "அட்சய திதி அன்னிக்கு தங்கம் வாங்கினா தங்க சேரும்னு" இப்போ பாத்திங்களா மறுபடி தங்கம் வாங்கிட்டோம். அவன நச்சரிச்சு புடுங்கிட்டு வாங்கிட்டோம்னு பேசிட்டு இருப்பாங்க.

அதுல புதுசா இப்போ தீபவளிக்கு ஜோதுடம் பாத்து என்ன கலர் துணி வாங்கலாம்னு சொல்லிருக்காங்க. கீழ இருக்கிற படத்தை கிளிக் பண்ணி படிச்சு பார்த்து பலனை அனுபவிச்சுக்குங்க மக்காஸ்...

இதுக்கு பேர்தான் சாலை மறியலா???

சாலை மறியல்னா ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து தான் செய்கிறார்கள். ஆனால் இப்போ இத சிலர் ஃபேஷனா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நேத்து தி.நகர் போலாம்னு போனப்போ மேற்கு மாம்பலம் கிட்ட வரிசையா பேருந்து, வண்டி எல்லாம் நிப்பாட்டிட்டாங்க.

என்னமோ கும்பலா இருக்காங்களே என்னனு தெரியலையேனு யோசிச்சிட்டு இருக்கும் போது ஒருத்தர் "ஏதோ சாலை மறியலாம்" அப்படினார். எப்படிங்க சொல்றீங்க அப்படினேன். ஆக்ஸிடெண்டா இருந்தா இந்நேரம் ஆம்புலன்ஸ் வந்திருக்கும்ல.. என்று என்னை ஒரு லுக் விட்டார். சரி நமக்கு ஏன் வம்புனு, நானும் கருமமே கண்ணா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

கூட்டத்த பாத்தது ஆஹா பெரிய மறியல் போல நாம இன்னிக்கு தி.நகர் போனமாதிரிதான்னு நினைச்சேன். அப்போதான் ஒரு போலிஸ்காரார் வேகமா வந்தார். கூட்டத்துக்குள்ள போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வெளில வந்து போன் போட்டு பேசினார் (இங்கன நிறைய பேர் இருக்காங்க வாங்கடா நல்லா கும்மிட்டு போலாம்னு சொல்லிருப்பார் போல).

கொஞ்ச நேரத்துல 4/5 போலிஸ் கைல லத்தியோட வந்தாங்க. அவங்கள திரும்பி பாத்துட்டு திரும்பினா இங்க மறியல் பண்றோம்னு சொன்னதுல ஒரு 10 பேர் தான் இருக்கானுவ. மீதி எவனையும் காணோம். என்னடானு கேட்டா இவங்க மட்டும் தான் சாலை மறியல் பண்றவங்களாம். மீதி எல்லாம் வேடிக்கை பாக்க வந்தாங்களாம்.

வந்த போலிஸ்காரங்க அங்க போய் மக்கள்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி (தமிழ் சினிமால அப்படிதான செய்யுராங்க) அவங்கள கலைஞ்சு போக சொல்வாங்கனு நினைச்சேன். ஆனா போனவங்க, ஆளுக்கு 2 பேரை தள்ளி பிடிச்சுகிட்டாங்க. இன்னொருத்தர் போக்குவரத்தை சீர்படுத்தி விட்டுட்டார்.

இவ்ளோதான் அவங்க சாலை மறியல்.

அவங்க கோரிக்கை என்ன? அதை நிறைவேற்றலைனா கூட பரவால. குறைந்த பட்சம் யாராவது கேட்டாங்களா என்னானே தெரியல???. :(

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - புதிய கவிதை நூல்


கனவுகளை சுமந்து கொண்டு ஒரு கவிதை நூல்...

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகனின் மூன்றாவது படைப்பு.

சென்னையில் ஜனவரி மாதம் நடந்த புத்தகத்திருவிழாவின் போது தான் தனது இரண்டாவது படைப்பான "மயிலிறகாய் ஒரு காதல்" புத்தகத்தை வெளியிட்டார்.

குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு கவிதை தொகுப்பு.

விஸ்டம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்

சென்னையில் இப்புத்தகம் கிடைக்குமிடங்கள்:

New Book Lands
#52C Basement
North Usman Road
T. Nagar
Chennai - 600017
Landmark: Opp ARR Complex,Near Panagal Park
Phone: 044-28158171, 28156006

2.Hikkin Bothams

3.AnyIndian Book shop,T.ண்agar

4.New Century book shop

5.Wisdom Educational Service
10/8, Dr.Nammalvar Street,
Triplicane,
Chennai-600005
Phone:044-28447476
Mobile:9382181319,9841162927
Email:wisdomedu2003@yahoo.co.in

தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிக்கிங் பாதம்ஸ் மற்றும் நியூ சென்சுரி புக் ஹவுஸிலும் கிடைக்கும்.

மற்ற படைப்புகள்:

நிலாக்காலங்கள்
மயிலிறகாய் ஒரு காதல்

தேர்வு முடிவுகள்...

மார்ச் மாதம் முடிந்த +2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. எப்போதும் போல் இல்லாமல் முதல் மதிப்பெண் (1182) -ஐ ஒரு மாணவனும் மாணவியும் பெற்றுள்ளனர். இரண்டாம் மதிப்பெண் (1181)-ஐயும் மாணவனும் மாணவியும் பெற்றுள்ளனர். மூன்றாவது மதிப்பெண் 1180-ஐ ஒரு மாணவி பெற்றுள்ளார்.

முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்சி.

முதல் மதிப்பெண் பெற்றவர்கள் (1182)

R.தாரணி,
வித்யாவிகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.

M.ராஜேஸ்குமார்
புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

இரண்டாவது மதிப்பெண் பெற்றவர்கள் (1181)

குமார் விக்ரம்
வித்யாவிகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.

ரம்யா
K.K.N பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

மூன்றாவது மதிப்பெண் பெற்றவர்கள் (1180)

K.தீபா
S.R.V பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம், நாமக்கல்.


தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கொலைவெறியுடன் ஒரு காலை - குருவி

எப்போதும் போல் சனி இரவு தூங்குவதற்குள் ஞாயிறு காலை ஆகிவிட்டது. 3 மணிக்குதான் உறங்கினேன். 6.30 க்கு நண்பன் எழுந்திருடா என எழுப்பினான். ஏண்டானு கேட்டா, கெளம்பு கெளம்பு படத்துக்கு நேரமாச்சு, சீக்கிரம் கிளம்புடானு மிரட்டல் வேற. என்ன படம்னு சந்தடி சாக்கில் கேக்க "குருவி"-னு சொன்னான். ஆனது ஆயிடுச்சு போய் தான் பாப்போமே (ஓசி டிக்கெட் தான) அப்படினு கிளம்பியாச்சு.

காலைல 7.30 ஷோக்கு அதிகம் வரமாட்டாங்க அப்படினு நினைச்சுட்டு போனா அவனவன் புள்ள குட்டியோட குடும்பமா வந்து ஒக்காந்திருக்காங்க. நீங்க வந்தீங்க சரி அந்த குழந்தைங்க என்னடா பாவம் பன்னுச்சு இப்படி காலைல 7.30 இழுத்துட்டு வந்திருக்கீங்கனு நினைச்சுகிட்டேன். அதுக்குள் நண்பன் வேறு வாடா உள்ள போலாம், படம் ஆரம்பிச்சுடும்னு இழுத்துட்டு போனான்.

இருக்கைய தேடிபுடிச்சு உட்கார்ந்து திரைய பார்த்தா, விஜய் பயங்கரமா கார் ஓட்டிட்டு இருக்கார். என்னடா இப்படி கும்பலா போறாங்களேனு நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது அது ரேஸாமாம். கண்ணுக்கு குளிர்ச்சியா மாளவிகாவ காட்டினாங்க, அதுக்கப்புறம் அது வரவேயில்லை, ஏன்னு தெரியல. நல்லா இருந்தா மறுபடி படத்துல இருக்க மாட்டாங்க போல. :)



ரேஸ பத்தி சொல்லாம விட்டுட்டேனே, விஜய் கார் ஓட்டுராரு, அதுவும் புது கார் இல்ல, ரேஸ் காரும் இல்ல, நம்ம ஊரு காய்லாங்கடைல நிக்குமே அந்த ஓட்ட வண்டி. அவரு போற வேகத்துக்கு ஒவ்வொரு பார்ட்டா கழண்டு விழுது. ஒரு கட்டத்துல ஆக்ஸிலரேட்டர் பெடலே கழண்டு கீழ விழுந்துடுச்சு. அப்பாடி முடிஞ்சது கத அப்படினு நினைச்சா அங்கதான் டிவிஸ்ட் வைக்குறாரு நாம்ம இயக்குனர். கார் நிக்கிற கண்டிசனுக்கு போயிடுச்சு, அப்போதான் அது நடந்துச்சு. நம்ம விஜய் இருக்காரே விஜய் (என்னடா பண்ணினார்னு கேக்குறது புரியுது. இருங்க அவசரபடாதீங்க, சொல்றேன்) குனிஞ்சு ஆக்ஸிலரேட்டர் வயர எடுக்குறாரு. காருக்கு எந்த ஊர்லடா ஆக்ஸிலரேட்டர் வயர் இருக்குனு நீங்க என்னைய கேக்ககூடாது ஆமா.

அந்த வயர வாய்ல கடிச்சு இழுத்த இழுப்புல கார் கன்னாபின்னானு போகுது. கடைசில பாத்தா கார் ஒரு ஜம்ப் பண்ணி வந்து நிக்குது, கேட்டா மொதல்ல வந்துடுச்சாமாம். :P. அவ்ளோதான் மாளவிகா ஒரு ஜம்ப் பண்ணி வந்துச்சு, அதோட பாய்பிரண்ட தட்டிவிட்டுட்டு வந்து கிஸ் பண்ணுச்சு, அப்புறம் ஒடனே ஒரு பாட்டுக்கு ஆடுச்சு. அம்புட்டு தேன் அதுக்கப்புறம் அத காணல...



அதுக்கப்புறம் படம் என்னனு எல்லாம் கேக்கப்பிடாது. விஜய் குடும்பத்தை காட்டுனாங்க, அப்புறம் ஒடனே கெளம்பி மலேசியா போனாரு (மலேசியா போறத்துக்கு இந்த பாஸ்போர்ட், விசா அப்படினு சொல்லுவாங்களே அதெல்லாம் வேணுமுங்களா). அங்கன வில்லன் கூட ஒரு சண்டை. அப்படியே வில்லன் வீட்டுக்கு போறாரு. அங்க திரிசாவ பாக்குராரு. திரிசா வேற யாரு,(என்னங்க இது கூட தெரியாம இருக்கீங்க) நம்ம வில்லன் தங்கச்சி தான். அவங்களுக்கு விஜய பாத்ததும் காதல் பத்திக்குது. அப்புறம் இந்தியா திரும்பி வராங்க. என்னங்க இது சின்னபுள்ளதனமா கேள்வி கேட்டுகிட்டு, திரிசாவும் கூடத்தான் வர்ராங்க.

முதல் பாதில விஜய் கூடவே ஒட்டிட்டு இருந்த விவேக் இரண்டாவது பாதில காணலை. யாரது படத்துல காமெடி இல்லையானு. ராஸ்கல் பிச்சி புடுவேன் பிச்சி. அப்புறம் ரெண்டாவது பாதில வில்லன் வர்ராரு சண்டை போடுறாங்க. வழக்கம் போல விஜய் ஜெயிக்குறாரு. திரிசாவ கை புடிக்குறாரு. அவங்க அப்பா, ஊர் மக்களை காப்பாத்துராரு. அம்புட்டு தான்.

இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இன்னமும் நீங்க தெரிஞ்சுக்கனும்னு ஆசபட்டீங்கனா நீங்களே போய் பாத்து தெரிஞ்சுக்குங்க/சந்தோசப்படுங்க(?!). :)))

பி.கு:
1. எனக்கு பின்னாடி இருந்த 2 சின்ன பசங்க ஏன்னு தெரியல சிரிச்சுட்டே இருந்தாங்க.
2. குருவினு டைட்டில நல்லா மேச் பண்ணிருக்காங்க.

குருவி விளக்கம்:
மலேசியா-ல இருக்கிறவங்க தமிழ்நாட்ல இருந்து பட்டுசேல, மாம்பழம், சில எல்க்ட்ரானிக்(?!) பொருட்கள் எல்லாம் கேப்பாங்களாம். அத கொண்டு போய் அங்க கொடுத்துட்டு வர்ரவங்க பேர்தான் "குருவி".

எப்படி பட டைட்டில் மேச் ஆயிடுச்சா???. :))))

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...



வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே.....ஹோ....ஓ
தமிழ் வந்து தாயமாடுமே..
ராகத்தின் ஊஞ்சல் நானாடிப் பார்க்கிறேன்
ஒரு கோடி நாட்களை ஒரு நாளில் வாழ்கிறேன்
குயில் தோப்பின் பாடலாகிறேன்..

[ வானம் வாழ்த்த........

நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டுவேன்
தார்சாலைக் கூந்தலில் பூக்கள் சூட்டுவேன்
நீயாக போர்வையாய் பனிமூட்டம் பார்க்கிறேன்
நிலவாக சூரியன் மாறக் கேட்கிறேன்
நான் போடும் மெட்டுக்கு கிளிகள் கவிதை சொல்லும்
சட்டென்று மீனெல்லாம் செதிலைத் தட்டித் துள்ளும்
பூவாசம் சிந்தாமல் காற்றின் கைகள் அள்ளும்
வண்டெல்லாம் கோபத்தில் காவல்நிலையம் செல்லும்
மழைத் தீயில் நானும் வேகிறேன்....ஹோ....ஓ
இசைமூச்சின் ஈரமாகிறேன்..

[வானம் வாழ்த்த.......

கண்ணாடித் தோட்டமாய் பொன்னேரி தோன்றுதே
மின்சார மீன்களாய் ஓடம் நீந்துதே
தாய்நாடு போலவே தேன்கூடு பார்க்கிறேன்
தமிழ்க் காதல் நேரவே பாடித் தீர்க்கிறேன்
நாடெந்தன் தாய்வீடு பாசத்தோடு சொல்வேன்
மரமெல்லாம் என் சொந்தம் என்றே கட்டிக் கொள்வேன்
பேரிக்காய் தோப்புக்குள் முயலை கூட்டிச் செல்வேன்
உன் அத்தான் நானென்றே உறவைச் சொல்லித் தருவேன்
உயிருக்குள் பேதமில்லையே.......ஓ......ஓ
உறவுக்கு ஏது எல்லையே..

[வானம் வாழ்த்த.......


அன்பு குமார்...

உனக்கு மிகவும் பிடித்த பாடல்.

உன் பிறந்த நாளில் உனக்காக....

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

அக்கா - வாழ்த்துகள்


சின்ன வயதில் தாத்தா வீட்டிலிருந்து படித்தாள். நான் மட்டும் அப்பா, அம்மாவுடன் இருந்தேன். எதாவது பண்டிகை, விசேசம் போன்ற சமயங்களில் தான் கூட்டி வருவார்கள். அதானால் அப்போதெல்லாம் அவளும் ஒரு விருந்தினர் போலதான் எனக்கு. நான் மட்டும் தான் தனிக்காட்டு ராஜா என்பது போல் இருந்தேன்.

ஆறாம் வகுப்பு செல்லும் போது தான் அவளை இங்கு அழைத்து வந்தனர். அப்போது நான் 4-ம் வகுப்பு. நான் பக்கத்தில் உள்ள பள்ளி என்பதால் நடந்தே சென்று விடுவேன். ஆனால் அவள் வேறு பள்ளிக்கு சிறிது தூரம் செல்ல வேண்டும் என்பதால் சைக்கிள் வாங்கினார்கள். அவளுக்கு அப்போது சைக்கிள் ஓட்ட தெரியாது. ஓட்ட தெரியாத அவளுக்கு சைக்கிளா? எனக்கும் சைக்கிள் வேண்டும் என்று அழுதேன். அதுதான் எனக்கு தெரிந்து முதலில் ஆரம்பித்த சண்டை.

காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் மட்டும் தான் பழகுவாள். சைக்கிள் ஓட்ட பழகுவதற்குள், விடுமுறையில் சைக்கிளில் அதிகம் சுற்றியது நான்தான். பின் அப்படியே சமாதானமாகி போய்விட்டது.

ஆறாம் வகுப்பு, நானும் அதே பள்ளியில் சேர்ந்த போது எனக்கும் தனி சைக்கிள். பள்ளி செல்லும் போது கிளம்ப நேரம் ஆகிவிட்டால் காத்திருந்து என்னை அழைத்து செல்வாள், ஆனால் நான் என்றும் அவளுக்காக காத்திருந்து அழைத்து சென்றதில்லை. சைக்கிள் பழுதான சமயங்களில் அவளுடன் என்னை அழைத்து செல்வாள். சில சமயம் நானே மறுத்து நண்பர்களுடன் சென்று விடுவேன். ஆனால் அவளை என்னுடன் அழைத்து சென்றதோ, அவள் என்னுடன் வருகிறேன் என்று கேட்டதோ இல்லை.

அப்போதே எனக்கு, பேனா, பென்சில், நோட்டு என எது வேண்டுமானாலும் அவளிடம் வாங்கிக்கொள்வேன். எனக்கு தெரிந்து அவளுக்கா நான் எதையும் கொடுத்ததில்லை. இப்படியே தான் எங்கள் பள்ளி நாட்களெல்லாம் போனது.

மீண்டும் 11-ம் வகுப்பு செல்லும் போது சித்தி வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவ்வப்போது ஊருக்கு செல்லும்போது மட்டும் தான் பார்பது, பேசுவது எல்லாம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிதான் செல்வதால் தம்பிகள் உடன் இனிமையாக சென்றுவிடும், எவ்வித சண்டையும் இல்லாமல்...

அவள் கல்லூரி நாட்களில் நான் 11, 12 வது என்பதால் அதிகம் சண்டையில்லை. ஆனாலும் என்மீதான அன்பு மட்டும் குறைந்ததில்லை. என் தேர்வுக்கெல்லாம் அவள் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பாள். எங்காவது சென்று வரும் சமயங்களில் எனக்கு பிடித்த எதாவது வாங்கிவருவாள்.

நான் கல்லூரில் சேர்ந்த போது அவள் கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவள் தோழிகளை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவாள். அவர்களும் அன்புடன் பழகுவார்கள். அவர்கள் உன்னைப் பற்றி கேட்டார்கள் என அடிக்கடி கூறுவாள். இப்போது கூட அடிக்கடி என்னுடன் பேசுவார்கள்.

அவள் எதாவது வேண்டும் கேட்டால் கூட எப்போதாவது தான் வாங்கிச் செல்வேன். அம்மாவும், அப்பாவும் கூட திட்டி இருக்கிறார்கள். அவளின் திருமண சமயங்களில் கூட அவளுடைய விருப்பங்கள் என்னவென்பது கூட நான் கேட்டறிந்தது இல்லை. அவள் தாய்மையடைந்திருந்த சமயங்களில் கூட அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்திருந்தாலும் நானாக அவளுக்கு இது பிடிக்கும் என்று வாங்கிச் சென்றதில்லை.

இப்போது கூட ஊருக்கு செல்லும் சமயங்களில் சித்தி வீடு, நண்பர்கள் வீடு, ஊர் சுற்றல் என்று கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்பதால் தானோ என்னவோ, நான் ஊருக்கு செல்லும் சமயங்களில் அவளும் ஊருக்கு வந்துவிடுகிறாள்.

இப்போது அவள் குழந்தை, குடும்பம் என்று ஆனபின்பும் கூட அவள் குழந்தைக்கு அடுத்தபடியாக நேசிக்கும் ஜீவன் நானாக தான் இருக்கும். அப்பா, அம்மா கூட என்னை அடித்து தான் வளர்த்திருப்பார்கள். ஆனால் என்றுமே என்மீது அன்பு மட்டுமே கொண்ட ஒரு ஜீவன்.

அக்காவின் இந்த பிறந்தநாளில் இருந்தாவது அவளுக்கு பிடித்த தம்பியாக இருக்க வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா(ஜெயந்தி)...

என் நினைவில்...

கல்லூரி நண்பன் கண்ணனுடன் நீண்ட நேரம் மடிக்கணினியில் சாட் செய்து விட்டு இப்பொழுது தான் கட்டிலில் சாய்ந்தேன். எங்களின் மற்றொரு நண்பன் அருணுக்கு திருமணம் என்று அவன் சொன்னதை மனதில் அசைப்போட்டப்படி படுத்துக்கிடந்தப்போது கல்லூரியில் நாங்கள் படித்தப்போது நடந்த அந்த இனிய நினைவுகள் மனதில் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று வெள்ளிக்கிழமை, 3.30 முதல் 4.30 வரை எந்த வகுப்பும் இல்லை. யாருக்கு எந்த துறையில் விருப்பமோ அதற்கு செல்லலாம் என சொல்லி இருந்தார்கள். சிலர் விளையாடச் செல்ல, சிலர் கணினி வகுப்புக்கு செல்ல, பலர் வகுப்பிலேயே உட்கார்ந்து அரட்டை கச்சேரி செய்வார்கள், எனக்கு அதில் விருப்பம் இருக்காது அதனால் நூலகத்திற்கு சென்றுவிடுவேன். அன்றும் அப்படிதான், எனக்கு பிடித்த வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது "ராஜா" என்று யாரோ அழைத்தார்கள். திரும்பி பார்த்தேன், ஒரு பெண் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். யார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"நீங்க தானே செகண்ட் இயர் சி.எஸ் ராஜா" என்றாள்.

"ம்" என்று தலையாட்டிவிட்டு என்ன என்பது போல் பார்த்தேன்.

"நான் மதி. ஃப்ஸ்ட் இயர் கெமிஸ்ட்ரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, போன வருட ஆண்டு மலர்ல உங்க கவிதை படிச்சேன், நல்லா இருக்கு" என்றாள்.

"நன்றி" சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

அதன் பின் அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது. மாதாமாதம் கல்லூரி மலரில் வரும் என் கவிதைகளை படித்துவிட்டு பாராட்டோ, விமர்சனமோ எதாவது ஒன்று சொல்வாள். நாட்கள் செல்ல செல்ல அவளுடைய விமர்சனங்களை நானும் எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

இப்படி இருக்கையில் ஒருநாள், நான் கேன்டினில் இருந்தேன். அப்போது தன் தோழிகளுடன் அங்கு வந்தாள். என்னை பார்த்துவிட்டு தனியே என்னிடம் பேச வந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தேன், அவளும் சிரித்துவிட்டு என் எதிரில் அமர்ந்தாள்.

"ராஜா, நீங்க தமிழ்மன்ற போட்டில கலந்துக்கலையா?. பேர் லிஸ்ட் பார்த்தேன், அதில் உங்க பேர் இல்லையே"

"இல்லை, கலந்துக்கல"

"ஏன் கலந்துக்கல"

"போட்டிக்காக நான் கவிதை எழுதறதில்லை. அதில்லாம என்னோட கவிதைய திருத்தினாவோ, தப்பு சொன்னாவோ எனக்கு பிடிக்காது-அதுனாலதான் கலந்துக்கல".

"அதெல்லாம் பாக்க முடியுமா?, அப்படி திருத்தங்கள் வந்தாதானே உங்களால இன்னும் சிறப்பா கவிதை எழுத முடியும். நீங்க கண்டிப்பா கலந்துக்கனும்."-என்று கூறிவிட்டு என்னுடைய பதிலை கூட எதிர்பாராமல் எழுந்து சென்று விட்டாள்.

அதுவரை எத்தனையோ பேர் சொல்லி மாறாத முடிவை மாற்றிக்கொண்டு, அடுத்த நாள் பெயர் கொடுத்தேன். அன்று மாலை நூலத்தில் இருந்தபோது அருகில் வந்து பேர் கொடுத்ததுக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அடுத்த வாரம் தமிழ்மன்ற விழாவில் கல்லூரியே கலைகட்டி இருந்தது. முதல் நாள் கவிதை, ஓவியம், நடனப்போட்டி என நடந்தது.

கவிதைப்போட்டிக்கு செல்லும்முன் வந்து வாழ்த்து சொல்லி அனுப்பினாள். அடுத்த நாள் காலை பேச்சுப்போட்டி, மாலையில் விழா நிறைவில் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. பேச்சுபோட்டி அரங்கில் ஓரளவு கூட்டம் இருந்தது. நிர்வாகக்குழுவில் இருந்த கண்ணன், தமிழ் அய்யாவை பார்க்க வேண்டி இருந்ததால் நானும் அவனுடன் அங்கு சென்றேன். பேசிவிட்டு திரும்பும் போது மேடையை பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கே மதி உட்கார்ந்திருந்தாள். இவள் பேச்சுப்போட்டியில் இருக்கிறாளா? முன்பே தெரியாமல் போய் விட்டதே, பேசி முடித்துவிட்டாளோ என்னவோ தெரியவில்லையே என யோசித்துக்கொண்டே, கண்ணனை, நீ போடா நான் கொஞ்ச நேரம் இங்கிருந்துட்டு
வர்ரேன் என்றேன். அவனுக்கு அவசர வேலை இருந்ததால் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, அப்போதுதான் மதி பேசத்தொடங்கினாள். கணீரென்ற குரலுடன் அதே சமயம் இனிமையாகவும் பேசினாள். இதுநாள் வரை எந்த பேச்சுப்போட்டியையும் நான் முழுமையாக கேட்டதில்லை. அன்று முடியும் வரை இருந்தேன். கவிதைக்கு எனக்கு முதல் பரிசும், சிறப்பான மேடைப்பேச்சு என்று மதிக்கு கேடயமும் வழங்கினார்கள். மாலை கலைநிகழ்ச்சிகள் முடிந்தது, மதியை பார்க்க முடியவில்லை.

திங்கள் கல்லூரி வந்ததும் சக வகுப்பு நண்பர்கள், மற்ற நண்பர்கள் என வாழ்த்துக்கள் கூறினர். மதியிடம் இருந்து எதிர்பார்த்தேன், ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. மாலை வழக்கம் போல் நூலகத்தில் இருந்தபோது, ஹலோ வாழ்த்துக்கள் என்று ஒரு வாழ்த்து அட்டையை நீட்டினாள். கொஞ்சம் வெளியில போய் பேசலாமா என்றாள்.

வாழ்த்து அட்டையை வாங்கிக்கொண்டு கேன்டின் சென்றோம். நீங்க எழுதிய கவிதையை பார்த்தேன் சூப்பரா இருந்தது என்றாள். எப்படி நீ பார்த்தாய் என்றேன். அப்போதுதான் தெரிந்தது அவளுடைய அப்பா தமிழ் ஆசிரியர் என்றும், அவருடைய நண்பர்தான் இங்கு தமிழ்துறை பேராசிரியர் என்பதும்.

நீங்க பேச்சுபோட்டில கலந்துக்கறத பத்தி சொல்லவே இல்லை என்றேன். சொல்லாட்டி என்னா. அதான் அன்னிக்கு பாத்தீங்களே என்றாள். நீங்க கடைசீல நின்னு கேட்டத நான் பாத்தேன். அங்கு வந்துட்டு போனபோது, எங்க பாக்காம போயிடுவீங்களோனு நினைச்சேன் நல்லவேளை பாத்துட்டீங்க என்றாள்.

உங்க பேச்சு நல்லாவே இருந்தது. அதெப்படிங்க துளி கூட பயமில்லாம அவ்ளோ தெளிவா பேசுறீங்க. எனக்கெல்லாம் மேடை ஏறினாவே பயம் வந்துடும் என்றேன்.

பள்ளில இருந்தே பழக்கமாயிடுச்சு, அதனால ஒன்னும் தெரியாது என்றாள்.

அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தோம். நிறையே பேசினோம்.

ஒரு நாள் ஏன் நீங்க எதிலையுமே அதிகம் கலந்துக்கிறது இல்லை என்றாள். நான் மௌனமாய் இருக்க அவளே தொடர்ந்தாள். ஏன் திறமைய வச்சுகிட்டு வேஸ்ட் பண்ணனும் என்று கூறினாள்.

அதன் பின் நானும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். பிற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளுக்கெல்லாம் சென்று வந்தோம். பல்கலைகழக அளவில் நடந்த தமிழ்துறை போட்டியில் கலந்துகொண்டு கவிதையில் முதல் பரிசு பெற்றேன். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என அவள் கலந்துகொள்ளவில்லை.

அன்று இரவு தான் ஒரு கடிதம் எழுதினேன். அன்பு மதிக்கு என்று ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்றே தெரியவில்லை, சுற்றி வளைத்து எழுதுவதிலும் விருப்பமில்லை. "பரிசு பெற்றது நானாக இருக்கலாம், முழுக்காரணமும் நீதான். அதற்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை, இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன்" என்று எழுதி மடித்து வாழ்த்து அட்டையில் வைத்துக்கொண்டேன்.

ஒரு வார விடுமுறைக்கு பின் அன்றுதான் கல்லூரி வந்தாள். எப்படியும் வாழ்த்துசொல்ல வருவாள் என காத்திருக்க ஆரம்பித்தேன். அதே போல் மாலையில் நூலகத்தில் இருந்த போது வந்தாள், வாழ்த்து சொல்லிவிட்டு செல்லும் போது அந்த வாழ்த்து கவரை கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.

வீட்டிலிருந்து கொண்டுவந்து நிறைய புத்தகங்கள் படிக்க கொடுப்பாள். முன்பெல்லாம் அடிக்கடி நண்பர்களுடன் தண்ணி அடிப்பேன், அது அப்படியே குறைந்து விட்டது. இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் கூட புத்தகம் படித்தே சென்றுவிடுகிறது.

ஒருநாள் ராஜா, நீங்க உங்க கவிதை எல்லாம் தொகுத்து வச்சிருக்கீங்களா என கேட்டாள். ஏன் என்றேன். அதுல இருந்து தேர்ந்தெடுத்து வார பத்திரிக்கைக்கு அனுப்பலாம் என்றாள். சரி என்று என் கவிதை நோட்டுகளை அவளிடம் கொடுத்து நீங்களே அனுப்பிடுங்க என்றேன்.
இனிமே இந்த "ங்க" போட்டு கூப்பிடறதெல்லாம் வேணாம், "நீ"னே கூப்பிடுங்க, இல்லைனா மதி-னு கூப்பிடுங்க என சொல்லிவிட்டு கவிதை நோட்டுகளை எடுத்துகொண்டு சென்றுவிட்டாள்.

அடுத்த வாரம் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும், அவற்றை அனுப்பவா என்றும் கேட்டுவிட்டு நோட்டுக்ளை திருப்பிக்கொடுத்தாள். ஒரு மாதம் கழித்து விடுமுறையில் ஞாயிற்றுகிழமை ஹாஸ்டலுக்கு போன் செய்தாள். ராஜா இந்த வாரம் உங்க
கவிதைதான் வார பத்திரிக்கைல வந்திருக்கு என கூறிவிட்டு வாழ்த்தும் கூறினாள். நாளைக்கு காலைல 9.45-க்கு கேன்டீன் வாங்க நான் வர்ரேன், அந்த புத்தகமும் எடுத்துட்டு வரேன் என்று கூறினாள்.

அடுத்த நாள் திங்கள் காலை, 9.35 இருக்கும் கல்லூரியே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் மெயின்ரோட்டுக்கு ஓடினார்கள். யாரோ ஒரு மாணவி அடிபட்டு விட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சொன்னார்கள். 10 மணி ஆகியும் மதி வராததால் கிளம்பலாம் என எழுந்தேன், வாசலில் மதியின் தோழி மேனகா ஓடிவருவது தெரிந்தது. அருகில் வந்தவள் மூச்சிரைக்க ராஜா, மதிக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு, ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்க என்றாள்.

எனக்குள் ஏதோ உலகமே இருண்டது போல் ஆனது. பின் சுதாரித்துக்கொண்டு அறை நண்பனை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றேன். அங்கு மதியின் அப்பா, அம்மா, தங்கை, சில கல்லூரி ஆசிரியர்கள் என எல்லோரும் சோகமாக நின்று கொண்டிருந்தனர். ICU-விறகு டாக்டர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அரை மணி நேரம் இருக்கும் வெளியே வந்த டாக்டர் ஏதோ சொல்ல, ராஜா என அழைத்தார்கள், மதி கூப்பிடுவதாக சொன்னார்கள். உள்ளே சென்றேன்.

மதி, என் மதி காலையில் பூத்த புது ரோஜாவாக இருக்க வேண்டிய மதி, கசங்கி, வாடி போய் படுக்கையில் கிடந்தாள். தலை முழுவது கட்டு போட்டிருந்தார்கள். அப்போதும் ரத்தம் கசிந்திருந்தது. அவளை பார்த்தது என்னை மீறி அழுகை வந்தது. அருகில் சென்றேன். என்
கையை பிடித்து தன் கையுடன் வைத்துக்கொண்டாள். ஏதோ பேச முயற்ச்சித்தாள் ஆனால் எதுவும் பேச முடியவில்லை.

லேசாக கண்கள் செறுகியது. மதி... மதி கையை லேசாய இறுக்கினேன்,விழித்துப்பார்த்தாள். அந்த பார்வையில் நான் உன்னை விட்டு போகப்போறேண்டா என்பது போல் துயரம் தெரிந்தது, ஒரு கையை உயர்த்தி "நல்லா இரு" என்பது போல சைகை செய்தாள். பின் என்
கையை இறுக பற்றிக்கொண்டு கண்னை மூடினாள். அதன் பின் அவள் விழிக்கவே இல்லை...

அவள் இறந்து ஒரு மாதம் இருக்கும், ஒரு நாள் தமிழ் அய்யா அழைத்தார் என அவரை பார்க்க சென்றேன். மதியோட அப்பா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னார் என்றார்.
மாலையில் தமிழ் அய்யாவுடன் மதி வீட்டுக்கு சென்றேன். என்னை பற்றிய எல்லா விசயங்களையும் கேட்டார். மதி அடிக்கடி சொல்வா, ரொம்ப அமைதியான பையன்பா. நல்லா கவிதை எழுதுவ என்று சொல்வாள் என்றார். அவள் எழுதிக்கொண்டிருந்த கவிதை டைரியை என்னிடம் கொடுத்து இதில் தினமும் ஒரு கவிதையாவது உங்கள பத்தி எழுதுவா என்றார். மதி இல்லைனு நினைக்காதப்பா, நீ அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போகனும் என்று கேட்டுக்கொண்டார்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாள் ஆகியது. கவிதை எழுதுவேன், எல்லாம் மதியைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பின் போட்டியில் கலந்து கொள்வதையே விட்டுவிட்டேன்.

உண்மைய சொல்லனும்னா நான் இன்னிக்கு இங்க வந்திருக்கிறதுக்கு முக்கிய காரணம் மதிதான். ஏன்னா அவ இறந்த பிறகு கொஞ்ச நாள் எதிலையுமே விருப்பம் இல்லாம இருந்தேன். அவ சொன்னபடி நீ இந்த காலேஜ் விட்டு போகும் போது பெருமையோட போகனும்னு சொன்னா, அவ கவிதைய வச்சு சொன்னா, இனிமே அது முடியாதுங்கறதுனால படிக்க ஆரம்பிச்சேன், காலேஜ் ஃபைனல் இயர்ல நான் தான் ஃப்ஸ்ட் வந்தேன். நல்ல வேலையும் அமைஞ்சது...

இன்னிக்கும் மதியோட ஆசைப்படி கவிதை எழுதிட்டுதான் இருக்கேன். ஆனா எங்கையும் அனுப்பறதில்லை. பிரசுரமான என்னோட மொத மற்றும் கடைசி கவிதையும் அவ அனுப்பின அந்த கவிதைதான். ஆனால் இந்த நினைவுகள் தொடரும்....

PIT போட்டிக்கு - வட்டம்



காதலுக்காக...












என் இதயம் சொல்லவில்லையா...



அழகாக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் உட்கார்ந்திருந்த கவின் ஒவ்வொரு புல்லாக பிடுங்கிக்கொண்டிருந்தான். அவன் கண் அடிக்கடி வாட்சையும், வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தது. அஞ்சு நிமிசத்துக்குள்ள 15 தடவ டைம் பார்த்திருப்பான். ச்ச இந்த டைம் போகவே மாட்டிங்குதே என்று முணுமுணுத்துக்கொண்டே பூங்காவின் வாசலைப்பார்த்த போது, அங்கே நிஷா அழகாய் தாவணியில் வந்து கொண்டிருந்தாள்.

அதுவரை "அவள் வருவாளா? என ஏங்கிக்கொண்டிருந்த மனம் அவளை பார்த்ததும் படபடப்பாகியது. ச்ச ஏன் இப்படி டென்சன் ஆகுது என நொந்துகொண்டே அவளைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்து, என்ன இன்னிக்கு ஆச்சர்யமா இருக்கு, ஐயா சீக்கிரமே வந்துட்டீங்க என கூறிக்கொண்டே அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள்.

சாய்ந்திரம் ஆயிடுச்சு, ஆனா இன்னும் எப்படி வெயில் அடிக்குது பாரு, இதுல டிராபிக் வேற, வர்ரதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு பா என்று வியர்வையை துடைத்துக்கொண்டாள்.

இதுவே வேறெப்போதாவது இருந்திருந்தா, அவள் வியர்வைக்கும் ஒரு கவிதை சொல்லி இருப்பான். ஆனால், பேச வார்த்தையே இல்லாதது போல் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏண்டா ஒரு மாதிரி டல்லா இருக்க?"

அதற்குள் நிஷாவின் மொபைல் சிணுங்கியது. இவனுக்கு மிகவும் பிடித்த "முதற்கனவே" பாடலைதான் அவள் ரிங்டோனாக வைத்திருந்தாள். ஆனால் இப்போது அதுவே வெறுப்பாக இருந்தது. அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, பின்பக்கம் இருந்த குளத்தில் குழந்தைகள் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏய் வெனஸ்டே கவிதா பர்த்டே பார்ட்டி சூப்பரா இருந்துச்சு தெரியுமா, நீ தான் மிஸ் பண்ணிட்ட..."

"ம்..."

"அவளுக்கு கிப்ட் வாங்க போனப்போ ரோஸ் ட்ராயிங் பார்த்தேன். ரோஸ்னா உனக்கு ரொம்ப பிடிக்குமேனு வாங்கிட்டு வந்துட்டேன்" - என ஒரு பெட்டியை கொடுத்தாள்.

"டேய், நான் சொன்னேனில்ல அந்த புக் படிச்சு முடிச்சுட்டேன், சூப்பரா இருக்கு, நீயும் படி" என்று ஒரு கவரை கொடுத்தாள்.

அப்படியே அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள், இவன் அமைதியாகவே இருந்தான், அவ்வப்போது கேள்விக்கு மட்டும் எதாவது பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

சரிடா நான் கிளம்புறேன், அம்மா எங்கயோ வெளியில போகணும்னு சீக்கிரம் வரச் சொன்னாங்க. நான் கிளம்பறேன் என எழப்போனவளிடம்...

"ஏய் நிஷா"

"ம். என்ன?"

"எதுவுமே சொல்லல."

"என்ன சொல்ல சொல்ற."

"நான் அன்னிக்கு கொடுத்த புக் பாத்தியா இல்லையா?"

"ம்.பாத்தேனே."

"அப்புறம்..."

"அப்புறம்னா?"

"நீ எதுவும் சொல்லலையே."

"அப்படியா. நான் எதுவும் சொல்லலியா?"

"சரி...
வீட்டுக்கு போய் நான் கொடுத்த புக்க மெதுவா படி எல்லாம் புரியும்" - என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அவசர அவசரமாக அங்கேயே பிரித்தான்.

முதல் பக்கத்திலேயே

நிஷா
கவின்
.

என்று இருந்தது.

அதற்குள் நிஷா-விடம் இருந்து குறுஞ்செய்தி.
பார்த்தான்.

தவியாய் தவித்தவனே
உனக்கு பிடித்த
உடைதானே அணிந்திருந்தேன்.
புரியாமல்
தவித்தது ஏனோ?


என்றிருந்தது...

அட ஆம, இன்னிக்கு மாம்பழ கலர் தாவணி போட்டிருந்தாளே என யோசிக்கும் போதே அவனையறியாமல் லேசாய் சிரித்தான்.

புத்தகத்தின் அடுத்த பக்கத்தில்

கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...


என்றிருந்தது.

நீங்களே பாருங்க - நான் என்னத்த சொல்ல???

மரங்கள்



யார்மீது கோபமோ
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.
நீண்ட சாலையில்
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.
வளர்ந்துவிட்ட
நகரத்தின் அடையாளமாய்
நடமாடும் மனித இயந்திரங்கள்
காங்கிரீட் கட்டிடங்கள்.
வாகன நெரிசலும், புகையும்...
வெகுநேரமாக சுற்றுகிறேன்
எங்கும் தென்படவில்லை
மரமெனும் மகத்துவம்
மெதுவாக புரிய ஆரம்பித்தது
சூரியனின் கோபம்.

கோடு குமார்

ரூம்ல மல்லாக்க படுத்து விட்டத்த வெறிச்சு பாத்துட்டு இருக்கார் நம்ம CK. நாம நல்லாதான எல்லா கேள்விக்கு yes, No, தெரியும், தெரியாது, No Idea-னு பதில் சொல்றோம், அப்புறம் ஏன் இவனுங்க "i will call you back" ஊட்டுக்கு அனுப்பிடறாங்க அப்படினு திங்க் பண்ணிட்டு இருக்கார்.

ஒரு வாரம் கழிச்சு ஒரு இண்டர்வியூக்கு போயிருக்கார்.

இன்டர். எடுப்பவர்: மிஸ்டர். குமரப்பன்.
CK: அது அப்பா, அம்மா வச்ச பேரு, எனக்கு நானே வச்சுகிட்ட பேர் கோடு குமார்.
இ.எ: கோடு குமார்???
CK:கோடுனா நீ நெனக்கிற line இல்ல மேன், கோடு, code kumar.
இ.எ:ஓஓஓ. அது என்ன code kumar???
CK:நான் படிச்ச கம்யூட்டர் சென்டர்ல நான் தான் நல்லா HTML கோடு எழுதுவேன். அத பாத்துட்டு அங்க இருந்தவங்க வச்ச பேர் தான் இது.
இண்டர்வியூ மேல நடக்குது..
.
.
.
.
இ.எ:நீங்க எதாவது என்கிட்ட கேக்கனும்னு விரும்பறீங்களா?
CK:இல்லை.
இ.எ எழுவதை பார்த்ததும் வேகமா எழுந்து கை குலுக்கிவிட்டு "i will call you back" னு சொல்றார்.
இ.எ: இதல்லாம் நாங்க தான் சொல்லனும்.
CK: ஆமா நீங்க தான் சொல்லனும், ஒரு சேஞ்சா இருக்கட்டுமேனு நான் சொன்னேன்.
இ.எ ஙே முழிக்கிறார்.


எப்படியோ முட்டி மோதி ஒரு கம்பெனில ஜாய்ன் பண்ணி ஒரு வருடம் முடிஞ்சுடுச்சு.
அன்னிக்கு அப்பதான் ஆபிஸ் வந்து சிஸ்டத்த ஆன் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார். புதுசா ஜாய்ன் பண்ணின ஒருத்தர் பக்கத்துல வரார்.

அவ்ரோட டீட்டெய்ஸ் எல்லாம் கேக்கிறார் நம்ம CK.

ஆமா சார் சும்மா ஒக்காந்திருக்கீங்களே வேலை எதுவும் இல்லையா?
அத ஏம்பா கேக்குற?

சாரி சார். நான் எதுவும் கேக்கல.

அட அதுக்கில்ல சொல்றேன் கேளு.

+2 பெயிலாயிட்டதால் டுட்டோரியல் காலேஜ் போய் பாஸ் பண்ணினேன். நாம தான் டுட்டோரியல் காலேஜ் போய்ட்டமே அப்புறம் ஏன் இன்னொருக்கா காலேஜ் போகனும்னு கம்யூட்டர் சென்டர்ல சேந்து html படிச்சேன்.

அங்க கோர்ஸ்ச முடிச்சுட்டு வேல தேட ஆரம்பிச்சேன். நிறைய கம்பெனி அட்டென் பண்ணினேன். இங்க தான் என்னோட திறமைய பாத்துட்டு வேல கொடுத்தாங்க.

அப்படி என்னென்ன கேள்வி கேட்டாங்க.

ஒருத்தன் html பேஜ்ல மொதல்ல என்ன கோட் வரும்னு கேட்டான். html பேஜ் வேற என்ன வரப்போகுது அப்படினு நெனச்சிட்டு html தான் வரும்னு குத்துமதிப்பா சொன்னேன்.

அப்புறம் இன்னொருத்தன் 2 சர்வர் இருக்கு, பழைய சர்வர எடுத்துட்டு புதுச மாத்தனும்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டான்.

அதுல இருக்கிற வயரெல்லாம் கழட்டி இதுல மாட்டினா முடிஞ்சதுனு நானும் சொன்னேன்.

கடைசியா இன்னொருத்தன் வந்து சைட் மெயின்டன் பண்னுவியானு கேட்டான். அதுக்கென்ன 1-க்கு ரெண்டா மெயிண்டன் பன்றேனு சொன்னேன். ஆனா இப்போ தான் தெரியுது அவனுங்க கேட்ட சைட் வேற, நான் சொன்ன சைட் வேறனு.

ஆமாண்ணே இவ்ளோ சொல்றீங்களே, இங்க குறிக்கோள் என்னண்ணேனு கேக்கவும் நம்ம CK கண் கலங்குகிறார்.

அய்யயோ என்னாசுணே.

ஒன்னுமில்லப்பா. இவ்ளோ நாளா என் மனசுல மட்டும் இருந்தத மொத தடவையா உங்கிட்ட சொல்றேன் கேளு.

கம்யூட்டர் சென்டர்ல கோர்ஸ முடிச்சுட்டு வந்து, மை நேம் கோடு குமார், மை பாதர் நேம் ஈஸ்......, அப்படினு கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்னிட்டு போய் இன்டர்வியூ அட்டென் பண்ணினா அவனவன் "i will call you back, "i will call you back" னு சொல்றானே தவிர எவனும் திரும்ப கூப்பிடல. அதனால அன்னிக்கு எடுத்தேன் ஒரு சபதம்.

என்னிக்காவது நான் ஒரு கம்பெனில PM ஆகி இன்டர்வியூ வற்றவனையெல்லாம் "i will call you back", "i will call you back" னு சொல்லனும்னு சொல்லிட்டு வெறியோடு பார்க்கிறார்.

எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார் புதிதாக வந்தவர்.

மூங்கில் நெல்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை. மூங்கில் நெல் அப்படி ஒரு செய்திய தினத்தந்தில படிச்சபிறகு தான் அதை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

நம்ம ஊர் கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குதுனு படிச்சிட்டு அங்க போய் பார்க்காம இருக்கமுடியுமா?. அதிலிருந்து நெல் கிடைக்குதுனு படிக்கவும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. அதான் பொங்கலுக்கு ஊருக்கு போறப்ப கண்டிப்பா போய் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டுதான் போயிருந்தேன்.

கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது. முன்பு சென்றிருந்த போது மலைக்கு மேலே செல்லும் சாலையின் இருபக்கத்திலும் வளர்ந்து நேராக, உயரமாக நின்ற மரங்கள் இப்போது பூத்து வளைந்து நிற்பது மிகவும் அழகாக உள்ளது.

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள். 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். இப்போதுதான் பூத்துள்ளது, இன்னும் ஒரு மாதம் ஆகும் காய்த்து விழுவதற்கு என்றார்கள்.



மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது.





கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சோதனைசாவடியில் கேட்டபோது, இங்கு மலையில் அடிப்பகுதியில் மட்டும் தான் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன. இங்கு உள்ளவை 1960 க்கு பின் நடப்பட்டவை, இப்போது முற்றி பூத்துள்ளன. இத்தோடு இதன் ஆயுட்காலம் முடிகிறது. காய்த்த பின் இந்த மரங்கள் காய்ந்துவிடும். இவற்றை வெட்டிவிடுவார்கள் என சியாம் சுந்தர் கூறினார்.

பிரிஞ்சவங்க சேர்ந்தா?

PIT - புகைப்பட போட்டிக்கு