அக்கா - வாழ்த்துகள்


சின்ன வயதில் தாத்தா வீட்டிலிருந்து படித்தாள். நான் மட்டும் அப்பா, அம்மாவுடன் இருந்தேன். எதாவது பண்டிகை, விசேசம் போன்ற சமயங்களில் தான் கூட்டி வருவார்கள். அதானால் அப்போதெல்லாம் அவளும் ஒரு விருந்தினர் போலதான் எனக்கு. நான் மட்டும் தான் தனிக்காட்டு ராஜா என்பது போல் இருந்தேன்.

ஆறாம் வகுப்பு செல்லும் போது தான் அவளை இங்கு அழைத்து வந்தனர். அப்போது நான் 4-ம் வகுப்பு. நான் பக்கத்தில் உள்ள பள்ளி என்பதால் நடந்தே சென்று விடுவேன். ஆனால் அவள் வேறு பள்ளிக்கு சிறிது தூரம் செல்ல வேண்டும் என்பதால் சைக்கிள் வாங்கினார்கள். அவளுக்கு அப்போது சைக்கிள் ஓட்ட தெரியாது. ஓட்ட தெரியாத அவளுக்கு சைக்கிளா? எனக்கும் சைக்கிள் வேண்டும் என்று அழுதேன். அதுதான் எனக்கு தெரிந்து முதலில் ஆரம்பித்த சண்டை.

காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் மட்டும் தான் பழகுவாள். சைக்கிள் ஓட்ட பழகுவதற்குள், விடுமுறையில் சைக்கிளில் அதிகம் சுற்றியது நான்தான். பின் அப்படியே சமாதானமாகி போய்விட்டது.

ஆறாம் வகுப்பு, நானும் அதே பள்ளியில் சேர்ந்த போது எனக்கும் தனி சைக்கிள். பள்ளி செல்லும் போது கிளம்ப நேரம் ஆகிவிட்டால் காத்திருந்து என்னை அழைத்து செல்வாள், ஆனால் நான் என்றும் அவளுக்காக காத்திருந்து அழைத்து சென்றதில்லை. சைக்கிள் பழுதான சமயங்களில் அவளுடன் என்னை அழைத்து செல்வாள். சில சமயம் நானே மறுத்து நண்பர்களுடன் சென்று விடுவேன். ஆனால் அவளை என்னுடன் அழைத்து சென்றதோ, அவள் என்னுடன் வருகிறேன் என்று கேட்டதோ இல்லை.

அப்போதே எனக்கு, பேனா, பென்சில், நோட்டு என எது வேண்டுமானாலும் அவளிடம் வாங்கிக்கொள்வேன். எனக்கு தெரிந்து அவளுக்கா நான் எதையும் கொடுத்ததில்லை. இப்படியே தான் எங்கள் பள்ளி நாட்களெல்லாம் போனது.

மீண்டும் 11-ம் வகுப்பு செல்லும் போது சித்தி வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவ்வப்போது ஊருக்கு செல்லும்போது மட்டும் தான் பார்பது, பேசுவது எல்லாம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிதான் செல்வதால் தம்பிகள் உடன் இனிமையாக சென்றுவிடும், எவ்வித சண்டையும் இல்லாமல்...

அவள் கல்லூரி நாட்களில் நான் 11, 12 வது என்பதால் அதிகம் சண்டையில்லை. ஆனாலும் என்மீதான அன்பு மட்டும் குறைந்ததில்லை. என் தேர்வுக்கெல்லாம் அவள் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பாள். எங்காவது சென்று வரும் சமயங்களில் எனக்கு பிடித்த எதாவது வாங்கிவருவாள்.

நான் கல்லூரில் சேர்ந்த போது அவள் கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவள் தோழிகளை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவாள். அவர்களும் அன்புடன் பழகுவார்கள். அவர்கள் உன்னைப் பற்றி கேட்டார்கள் என அடிக்கடி கூறுவாள். இப்போது கூட அடிக்கடி என்னுடன் பேசுவார்கள்.

அவள் எதாவது வேண்டும் கேட்டால் கூட எப்போதாவது தான் வாங்கிச் செல்வேன். அம்மாவும், அப்பாவும் கூட திட்டி இருக்கிறார்கள். அவளின் திருமண சமயங்களில் கூட அவளுடைய விருப்பங்கள் என்னவென்பது கூட நான் கேட்டறிந்தது இல்லை. அவள் தாய்மையடைந்திருந்த சமயங்களில் கூட அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்திருந்தாலும் நானாக அவளுக்கு இது பிடிக்கும் என்று வாங்கிச் சென்றதில்லை.

இப்போது கூட ஊருக்கு செல்லும் சமயங்களில் சித்தி வீடு, நண்பர்கள் வீடு, ஊர் சுற்றல் என்று கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்பதால் தானோ என்னவோ, நான் ஊருக்கு செல்லும் சமயங்களில் அவளும் ஊருக்கு வந்துவிடுகிறாள்.

இப்போது அவள் குழந்தை, குடும்பம் என்று ஆனபின்பும் கூட அவள் குழந்தைக்கு அடுத்தபடியாக நேசிக்கும் ஜீவன் நானாக தான் இருக்கும். அப்பா, அம்மா கூட என்னை அடித்து தான் வளர்த்திருப்பார்கள். ஆனால் என்றுமே என்மீது அன்பு மட்டுமே கொண்ட ஒரு ஜீவன்.

அக்காவின் இந்த பிறந்தநாளில் இருந்தாவது அவளுக்கு பிடித்த தம்பியாக இருக்க வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா(ஜெயந்தி)...