இந்தியா

இந்தியா,
ஜனநாயக நாடு
மக்கள் சொல்வதுதான்
எதுவுமே நடப்பதில்லை...
இருந்தாலும்
இந்தியா ஜனநாயக நாடு.

வேற்றுமை காணாத நாடு
போராடித்தான் பெறவேண்டும்
இட ஒதுக்கீடு
இருந்தபோதிலும்
இந்தியா வேற்றுமை காணாத நாடு

ஒற்றுமையான நாடு
அண்டை மாநிலத்துக்கே
தண்ணீர்தர மாட்டார்கள்
இருந்தாலும்
இந்தியா ஒற்றுமையான நாடு

பண்பாடு நிறைந்த நாடு
திருமணத்திற்கு முன்பே
உடலுறவு கொள்வோர் பலர்
இருந்தாலும்
இந்தியா பண்பாடு நிறைந்த நாடு

சாதி, மத பேதம் பார்க்காத நாடு
அரசியல் செய்ய மட்டும்
எல்லா ஜாதியும் வேண்டும்
இருந்தபோதிலும்
இந்தியா சாதி, மத பேதம் பார்க்காத நாடு

எல்லா நாடுகளிலும்
இந்தியாவை பார்த்து
கற்றுக்கொள்கிறார்களாம்.
என்ன கற்றுக்கொள்கிறார்கள்
இப்படி இருக்க வேண்டும் என்றா?
இப்படி இருக்க கூடாது என்றா?
அது தான் தெரியவில்லை....

உண்மை

நமக்கானவை
மறைக்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...
இதில்,
எனக்கானவை
கிடைக்கப்பெற்றால் கூட
ஊமையாகிப்போகிறேன்
உண்மைகளுடன் சேர்ந்து
நானும்...

என்னைப் பற்றி

வாழ்க்கையை முழுமையாக வாழத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன் நான். பிறந்தது வளர்ந்தது எல்லாம் நாமக்கல். இதுவரை எதுவும் சாதிக்கவில்லை, இனிமேலாவது ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைக்கிறேன் ஆனால் என்ன சாதிப்பது என இதுவரை ஒன்றுமே புரியவில்லை.

பள்ளி தொடங்கி கல்லூரி வரை எல்லாமே ஊரிலேயே முடித்துவிட்டு, ஒன்னரை வருடம் சுற்றிவிட்டு பின் தான் வேலை தேடலாம் என மொத முறையா வெளியூருக்கு கெளம்புறேன். பி.எஸ்.சி கம்பியூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டோம் வேல கண்டிப்பா கிடைக்கும் அப்படினு இங்க வந்து பாத்தா, எனக்கு முன்னாடியே எம்.சி.ஏ முடிச்சுட்டு ஏகபட்ட பேர் வேல தேடறேன் அப்படினு தேடிகிட்டு இருந்தாங்க. சரி ஆனது ஆகட்டும் அப்படினு நானும் இண்டர்வியூக்கு போக ஆரம்பிச்சேன். 4,5 கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போனேன், அங்க வெளிய போடா அப்படினு சொல்லாம "Call Back You" அப்படினு டீசண்டா வெளிய அனுப்பிட்டாங்க.

ஏன் எம்.சி.ஏ படிக்க வேண்டியது தானே, படிக்காம வர வேண்டியது அப்பறம் இங்க வந்து வேல கெடைக்கலனு ஓவர் பீட்டர் வுட வேண்டியது அப்படினு கேப்பீங்கனு எனக்குத் தெரியும். நானும் எம்.சி.ஏ படிக்கலாம் அப்பறமா ஏதாவது வேல கெடைக்குதானு பாக்கலாம் அப்படினுதான் நெனச்சேன், ஆனா பி.எஸ்.சி படிக்கும்போதே சும்மா இருக்காம கிளாஸ்-ல முந்திக்கொட்ட தனமா ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பேன். அப்புறம் லாங்வேஜ்னு இருக்கே PASCAL, C, C++ அதுல கொஞ்சம் புரோகிராமும் எழுதிப்புட்டேன். உண்மையா சொல்றேங்க இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா புரோகிராம்லா எழுதியிருக்கவே மாட்டேன். அதுல C, C++ கொஞ்சம் ஆர்வக்கோளாறு ஆயிப்போச்சு. அது, அந்த சப்ஜெக்ட் வாத்திக்கும், எச்.ஓ.டி-க்கும் புடிக்கல போல, கிளாஸ்ல வந்து, நல்லா புரோகிராம் எழுதறான் இவன் ரொம்ப நல்லவண்டா அப்படினுட்டாங்க. இதுதான் டைம்னு நம்ம பசங்களும் நம்மள உசுப்பேத்தி விட்டுட்டாங்க. அதோடயாவது விட்டிருக்க்லாம், விட்டாங்களா? ம்ஹும்.. விடலையே...

நீ, பி.ஜி எல்லாம் பண்ண வேண்டாம், யூ.ஜி முடிச்சுட்டு வேல தேடிகிட்டு அப்புறம் பி.ஜிய கரஸ்ல பண்ணு அப்படினுட்டாங்க. அத நெனச்சுக்கிட்டு நானும் கொஞ்சம் ஓவராவே போய்ட்டேங்க. ஆமாங்க பி.ஜி பண்ணாம இப்படியே ஆணி புடுங்க போலாம் அப்படினு கெளம்பி வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லா பயலுவலும், ஆணி புடுங்க போனா இங்கிலிபீசுல தான் பீட்டருவுடனும் அப்படிங்கரானுவ. நமக்கு ஏற்கனவே இங்கிலீசு சுட்டுபோட்டாலும் வராது, ஏன்னா நாமதான் பக்காவான தமிழனாச்சே. (ஆனா ஒரு மேட்டரு பாருங்க நா 1-வது படிக்க போனப்பவே உங்க அம்மா, அப்பா பேரு என்னானு கேட்டதுக்கு அம்மா பேரு மம்மி, அப்பா பேரு டாடி அப்படினு சொன்னவன். அதவச்சு ஊருக்குள்ள நம்ம பேரே மம்மிடாடி ஆகிபோச்சு. சரி மேட்ட்ருக்கு வருவோம்).

சரி எப்படியாவது ஆணி புடுங்க போய்ரனும்டா அப்படினு நானும் வேல தேட ஆரம்பிச்சேன். ஆனா ஒன்னும் ஒத்துவரல. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், நம்ம டாட் நெட் படிக்கலாம் அப்படினு படிக்க ஆரம்பிச்சேன். அந்த டைம்ல ஒரு கம்பெனில தகவல் தேடர வேலைல(வெப் ரிசர்ச்சர்) சேர்ந்துட்டேன். அதுல இருந்து கொஞ்சம் முன்னேறி, ஆணி புடுங்க ஆரம்பிச்சு இப்போ போய்கிட்டு இருக்கு.....

நீ நல்லவனில்லை

நீ நல்லவனில்லை
என்னை மன்னித்துவிடு.
நீ
நல்லவனில்லை என்பது
எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றி
நீ
என்ன நினைத்தாலும்
உண்மையை
உள்ளபடியே கூறப்போகிறேன்.

உன்னுடையதா
இந்த சமூகமா
இல்லை பருவமா
யாருடைய தவறு என்று
சரியாகத் தெரியவில்லை...

பெண்ணை
பெண்ணாக அல்லாமல்
போதையாகவும்
காமமாகவும்
பார்க்கும் கண்கள்...

பார்க்கும் நொடியிலேயே
என் முகம் தொடங்கி
செவ்விதழ்
கழுத்து
மார்பு
இடை
முழங்கால் என
பாதம் வரை மேய்ந்துவிடுகிறது
உன் கழுகுப் பார்வை...

இதில் எப்படி,
என்னை மட்டும் நீ
பெண்ணாக பார்ப்பது.

உன்னைப் பற்றி
முழுமையாக தெரியாவிட்டாலும்
இதையாவது தெரிந்துகொண்டேன்.

எனக்குத் தெரியும்
நீ நல்லவனில்லை...

என் செல்லம்

தினமும்
உனைப் பற்றி
கவிதைகள் எழுதுகிறேன்.
எழுதி முடித்தவுடன்
படித்துவிட்டு
கிழித்தும் விடுகிறேன்...

ஏனென்றா கேட்கிறாய்...
அதைப் படித்து
நீவேறு யாருக்காவது
பிடித்துப் போய்விட்டால்
என்ன செய்வேன்...

எதற்காகவும்
உனை
இழக்க முடியாதடா
என் செல்லம்...

உன்னோடு நான்


கற்பனையை எட்டாத கவிதையிலும்
தேடி முடியும்
தேடல்களிலும்
நிஜங்களை உரிக்கும்
உண்மையிலும்
நீ இல்லாத போது
நான் வாடுகிறேன்.
என் விருப்பங்கள்
உனை வேண்டுவதல்ல...
இருந்த போதிலும்கூட
உன் நிஜத்தோடு
நிழலாய்
நானும் வர ஆசைப்படுகிறேன்.

மழைக் காதல்

என் காதல்
அன்றொருநாள்
மழைக்காக
நிழற்க்குடையில்
நான் ஒதுங்கி நிற்க...
ஒற்றைக்குடையுடன்
வந்த நீ
இதை எடுத்துச் செல்
என நீட்டினாய்
குடையுடன் சேர்த்து
உன் காதலையும்...

அதை
மடக்கிவைத்துக்கொண்டு
உன்னுடன் நானும்
நனைந்தே வந்தேன்
என் காதலை
சொல்லும் விதமாக...

பள்ளிக் குழந்தை

பள்ளிக் குழந்தைபள்ளியிலிருந்து
திரும்பிய மகனை
அம்மா கேட்டாள்
என்ன சொல்லித்தந்தார்கள் என்று?...
எழுத சொல்லித்தந்தார்கள் என்றான்.
என் செல்லமே
என்ன எழுதினாய் என்றாள்
இன்னும் அதை
படிக்க சொல்லித்தரவில்லையே அம்மா...

வணக்கம்

விரைவில் சாரலாய் வருகிறேன்

நனையக் காத்திருங்கள்...


அன்புடன்,
சாரல்

என் பெயர்

என் பெயர்
பலரால் உச்சரிக்கப்படுவதை
நான் விரும்புகிறேன்.
நல்லவனாக, கெட்டவனாக
கோபக்காரனாக
சோம்பேறியாக
அழகானவனாக, அழகில்லாதவனாக
பொறுக்கியாக
இப்படி,
ஏதாவது ஒரு வகையில்
என் பெயர்
உச்சரிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.
அந்த பலரால்
என் கருத்துக்களை/எண்ணங்களை
செம்மைப்படுத்த முடியும்
என்பதால்
நான் விரும்புகிறேன்
என் பெயரை....