கோடு குமார்

ரூம்ல மல்லாக்க படுத்து விட்டத்த வெறிச்சு பாத்துட்டு இருக்கார் நம்ம CK. நாம நல்லாதான எல்லா கேள்விக்கு yes, No, தெரியும், தெரியாது, No Idea-னு பதில் சொல்றோம், அப்புறம் ஏன் இவனுங்க "i will call you back" ஊட்டுக்கு அனுப்பிடறாங்க அப்படினு திங்க் பண்ணிட்டு இருக்கார்.

ஒரு வாரம் கழிச்சு ஒரு இண்டர்வியூக்கு போயிருக்கார்.

இன்டர். எடுப்பவர்: மிஸ்டர். குமரப்பன்.
CK: அது அப்பா, அம்மா வச்ச பேரு, எனக்கு நானே வச்சுகிட்ட பேர் கோடு குமார்.
இ.எ: கோடு குமார்???
CK:கோடுனா நீ நெனக்கிற line இல்ல மேன், கோடு, code kumar.
இ.எ:ஓஓஓ. அது என்ன code kumar???
CK:நான் படிச்ச கம்யூட்டர் சென்டர்ல நான் தான் நல்லா HTML கோடு எழுதுவேன். அத பாத்துட்டு அங்க இருந்தவங்க வச்ச பேர் தான் இது.
இண்டர்வியூ மேல நடக்குது..
.
.
.
.
இ.எ:நீங்க எதாவது என்கிட்ட கேக்கனும்னு விரும்பறீங்களா?
CK:இல்லை.
இ.எ எழுவதை பார்த்ததும் வேகமா எழுந்து கை குலுக்கிவிட்டு "i will call you back" னு சொல்றார்.
இ.எ: இதல்லாம் நாங்க தான் சொல்லனும்.
CK: ஆமா நீங்க தான் சொல்லனும், ஒரு சேஞ்சா இருக்கட்டுமேனு நான் சொன்னேன்.
இ.எ ஙே முழிக்கிறார்.


எப்படியோ முட்டி மோதி ஒரு கம்பெனில ஜாய்ன் பண்ணி ஒரு வருடம் முடிஞ்சுடுச்சு.
அன்னிக்கு அப்பதான் ஆபிஸ் வந்து சிஸ்டத்த ஆன் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார். புதுசா ஜாய்ன் பண்ணின ஒருத்தர் பக்கத்துல வரார்.

அவ்ரோட டீட்டெய்ஸ் எல்லாம் கேக்கிறார் நம்ம CK.

ஆமா சார் சும்மா ஒக்காந்திருக்கீங்களே வேலை எதுவும் இல்லையா?
அத ஏம்பா கேக்குற?

சாரி சார். நான் எதுவும் கேக்கல.

அட அதுக்கில்ல சொல்றேன் கேளு.

+2 பெயிலாயிட்டதால் டுட்டோரியல் காலேஜ் போய் பாஸ் பண்ணினேன். நாம தான் டுட்டோரியல் காலேஜ் போய்ட்டமே அப்புறம் ஏன் இன்னொருக்கா காலேஜ் போகனும்னு கம்யூட்டர் சென்டர்ல சேந்து html படிச்சேன்.

அங்க கோர்ஸ்ச முடிச்சுட்டு வேல தேட ஆரம்பிச்சேன். நிறைய கம்பெனி அட்டென் பண்ணினேன். இங்க தான் என்னோட திறமைய பாத்துட்டு வேல கொடுத்தாங்க.

அப்படி என்னென்ன கேள்வி கேட்டாங்க.

ஒருத்தன் html பேஜ்ல மொதல்ல என்ன கோட் வரும்னு கேட்டான். html பேஜ் வேற என்ன வரப்போகுது அப்படினு நெனச்சிட்டு html தான் வரும்னு குத்துமதிப்பா சொன்னேன்.

அப்புறம் இன்னொருத்தன் 2 சர்வர் இருக்கு, பழைய சர்வர எடுத்துட்டு புதுச மாத்தனும்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டான்.

அதுல இருக்கிற வயரெல்லாம் கழட்டி இதுல மாட்டினா முடிஞ்சதுனு நானும் சொன்னேன்.

கடைசியா இன்னொருத்தன் வந்து சைட் மெயின்டன் பண்னுவியானு கேட்டான். அதுக்கென்ன 1-க்கு ரெண்டா மெயிண்டன் பன்றேனு சொன்னேன். ஆனா இப்போ தான் தெரியுது அவனுங்க கேட்ட சைட் வேற, நான் சொன்ன சைட் வேறனு.

ஆமாண்ணே இவ்ளோ சொல்றீங்களே, இங்க குறிக்கோள் என்னண்ணேனு கேக்கவும் நம்ம CK கண் கலங்குகிறார்.

அய்யயோ என்னாசுணே.

ஒன்னுமில்லப்பா. இவ்ளோ நாளா என் மனசுல மட்டும் இருந்தத மொத தடவையா உங்கிட்ட சொல்றேன் கேளு.

கம்யூட்டர் சென்டர்ல கோர்ஸ முடிச்சுட்டு வந்து, மை நேம் கோடு குமார், மை பாதர் நேம் ஈஸ்......, அப்படினு கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்னிட்டு போய் இன்டர்வியூ அட்டென் பண்ணினா அவனவன் "i will call you back, "i will call you back" னு சொல்றானே தவிர எவனும் திரும்ப கூப்பிடல. அதனால அன்னிக்கு எடுத்தேன் ஒரு சபதம்.

என்னிக்காவது நான் ஒரு கம்பெனில PM ஆகி இன்டர்வியூ வற்றவனையெல்லாம் "i will call you back", "i will call you back" னு சொல்லனும்னு சொல்லிட்டு வெறியோடு பார்க்கிறார்.

எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார் புதிதாக வந்தவர்.

மூங்கில் நெல்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை. மூங்கில் நெல் அப்படி ஒரு செய்திய தினத்தந்தில படிச்சபிறகு தான் அதை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

நம்ம ஊர் கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குதுனு படிச்சிட்டு அங்க போய் பார்க்காம இருக்கமுடியுமா?. அதிலிருந்து நெல் கிடைக்குதுனு படிக்கவும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. அதான் பொங்கலுக்கு ஊருக்கு போறப்ப கண்டிப்பா போய் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டுதான் போயிருந்தேன்.

கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது. முன்பு சென்றிருந்த போது மலைக்கு மேலே செல்லும் சாலையின் இருபக்கத்திலும் வளர்ந்து நேராக, உயரமாக நின்ற மரங்கள் இப்போது பூத்து வளைந்து நிற்பது மிகவும் அழகாக உள்ளது.

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள். 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். இப்போதுதான் பூத்துள்ளது, இன்னும் ஒரு மாதம் ஆகும் காய்த்து விழுவதற்கு என்றார்கள்.



மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது.





கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சோதனைசாவடியில் கேட்டபோது, இங்கு மலையில் அடிப்பகுதியில் மட்டும் தான் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன. இங்கு உள்ளவை 1960 க்கு பின் நடப்பட்டவை, இப்போது முற்றி பூத்துள்ளன. இத்தோடு இதன் ஆயுட்காலம் முடிகிறது. காய்த்த பின் இந்த மரங்கள் காய்ந்துவிடும். இவற்றை வெட்டிவிடுவார்கள் என சியாம் சுந்தர் கூறினார்.

பிரிஞ்சவங்க சேர்ந்தா?

PIT - புகைப்பட போட்டிக்கு