முடிவு தரும் மரணம்


என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.

தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...

அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.

மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

விடாது சரக்கு...

உன்னைத் தேடி
எப்போதும்
என் பயணம்
அமைவதில்லை
வழியில் காணும் போது
உனக்காக
காரணம் அமைத்து
நுழைகிறேன் உள்ளே!


இதுதான் வேண்டுமென்று
எப்போதும் சொன்னதில்லை
இருப்பதை வைத்து
சந்தோசப்படும் மனம்
இங்கு மட்டுமே!


ஒத்துக்கொள்ளாத போது
போன வேகத்தில்
வெளியே வந்தாலும்
ஏற்றுக்கொள்கிறேன்
சுயநினைவில்லா
சுரணையோடு....


காலம் கடக்கும் வேளையில்
விரட்டப்பட்டு
இருப்பிடம் நோக்கி
எழுந்து நடக்கிறேன்
தள்ளாடியபடியே
டாஸ்மார்க்கிலிருந்து.....

மலர்களே! மலர்களே! மலருங்கள்புகைப்பட போட்டிக்கு

புகைப்பட போட்டிக்காக எல்லோரும் புகைப்படம் எடுத்து போடறாங்க. நம்மளும் போடலாமே அப்படினு நான் கிளிக்கிய ரெண்டு புகைப்படங்கள்.

ஏற்காடு சென்றபோது அங்கே மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒரு மலர்.இது தஞ்சாவூர் சென்றபோது, அரண்மனை வளாகத்தில் ஒரு தாய் ஆடு குட்டிகளுக்கு பால் கொடுத்த காட்சி

இராஜ ராஜ சோழன் நான்
என் தஞ்சை அரண்மனை

அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள அமைப்பு விளக்கப்படம்
மணி மண்டபம்
மணி மண்டபம் சுற்றி சுற்றி கட்டப்பட்டுள்ள முறை அழகாக இருக்கிறது. அந்த சிறிய படிகட்டில் நாம் செல்வதே சிரமமாக உள்ளது, அப்போது அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது வியப்பாக உள்ளது.
சத்திரபதி சிவாஜியின் காசுகள்

தம்புரா மற்றும் வீனை
தர்பார் ஹாலில் மேற்கூரை வண்ண ஓவியங்கள்

தர்பார் மஹால் பெரியதாக உள்ளது. மேற்கூரையில் உள்ள வண்ண ஓவியங்கள் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இவை சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது, நிறைய ஓவியங்கள் அழிந்தும், அழிந்துகொண்டிருப்பதையும் காண முடிகிறது.
மணி மண்டபம் முன் இருந்த சிலை
மணி மண்டபத்திலிருந்து பெரிய கோவில்
அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறியவர்க்கு ரூ. 5, பெரியவர்களுக்கு ரூ.10, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ புகைப்படம் ரூ.150 என பணம் வசூலிக்கிறார்கர்கள். இதையே ஒரு அரண்மனையின் பல இடங்களில் வசூலிப்பதுதான் கொடுமையாக இருக்கிறது.

அரண்மனை கட்டிட அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. சில பகுதிகள் மட்டுமே பராமறிக்கப்படுகின்றன. சில பகுதிகள் செப்பனிடப்படுகின்றன. பல பகுதிகள் கேட்பாரற்று கிடக்கிறது. தர்பார் ஹால் கூட பராமரிக்கப்படுவதில்லை. இப்படியே சென்றால் பாதி பாழடைந்த நிலையில் இருக்கும் அரண்மனை இன்னும் சிறிது காலத்தில் அழைந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

அரண்மனையில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. ஆனால் 4,5 படிகளே அதில் இறங்கி பார்க்க முடிகிறது. அதற்கு மேல் உள்ளே செல்ல முடிவதில்லை. வெளிச்சம் இல்லாமலும், பராமறிக்கப்படாமலும் இருக்கிறது.

இராஜ ராஜ சோழன் நான்
நான் ஆண்ட தஞ்சை தேசம் தான்


சென்ற வாரம் அலுவலக நண்பரின் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றோம். அப்படியே தஞ்சை பெரிய கோவில் மற்றும் அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு வந்தோம். அதன் சில தகவல்கள் மற்றும் கிளிக்கிய புகைப்படங்கள்.

கோவில் நடையை மதியம் 1.00 மணிக்கு மூடி மாலை 4.30 க்கு தான் திறக்கிறார்கள்.

சாலையிலிருந்து முகப்புகோவிலின் முன்புறம் கால்வாய் அமைப்பு
முன்பு கால்வாயாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது குப்பைகள் கொட்டத்தான் இதை பயன்படுத்துகிறார்கள் போல. இதை செப்பனிட்டு பராமரித்தால் கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்கும்.

கோவில் கட்டியதன் விளக்கப்படம்

இதை கோவிலின் முகப்பு வாயிலிலேயே விளக்கப்படமாக வரைந்து வைத்துள்ளார்கள்.


பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நந்தி

குதிரை மற்றும் வெள்ளி யாணை வாகனம்


நந்திக்கு வலப்புறம் உள்ள அம்மன் கோவில்
பெரிய நந்திகோவிலின் முன்புறம் நிறுத்தி மன்னிக்கவும் கட்டி வைத்திருந்த யாணை. ஆசிர்வாதம் என்ற பெயரில் யாணையை காசு வாங்க வைக்கிறார்கள்.இரும்புக்குண்டுகள் (கோவிலில் ஒரு மாடத்தினுள் இருந்தது)
அடி தளத்திலிருந்தே கல்லில் சித்திர வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. உற்று நோக்கினால் தான் தெரிகிறது ஒவ்வொரு சிறிய கல்லிலும் ஒவ்வொரு சித்திரம்.
பின்புறமிருந்து கோபுரம்

கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், வலப்புறம் பார்த்து உள்ளது, இடப்புறம் பார்த்து உள்ளது இரண்டுக்கும் சிறு வித்தியாசம் கூட நம்மால் காண முடியாது.

கோவிலில் நான் தெரிந்துகொண்ட ஒரு செய்தி, கோபுரத்தின் நிழல் கீழே விழுமாம், அதில் உள்ள கலசத்தின் நிழல் தான் கீழே விழாது என்று சொன்னார்கள்.

நம்ம ஊர் மக்கள் இதை மற்ற கோவில்களைப் போல்தான் வந்தோமா, வணங்கினோமா சென்றோமா என்று இருக்கிறார்கள். அதில் உள்ள சிற்ப்பங்கள், கட்டிக முறை, ஆகியவற்றை காண்பது இல்லை.

இப்போது கோவிலில் ஆங்காங்கே பல கற்றகள் உடைந்து இருப்பதை காணமுடிகிறது. பராமறிப்பு பணிகளும் நடக்கின்றன. ஆனாலும் கோவிலின் பொலிவு குறைந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

(தொடரும்...)

என்னோட எட்டு

பிரியா மற்றும் தேவ் ஆகியோரின் பாசமான(?!) அழைப்பை ஏற்று நானும் எட்டு போடறேன்.

திடீர்னு, நம்மள பத்தி எட்டு பெருமையான விசயங்கள் சொல்ல சொன்னதும் கொஞ்சம் தடுமாறிப்போயிட்டேன். கண்ணகட்ட ஆரம்பிச்சிடுச்சு. அப்புறம் சோடா குடிச்சுட்டு, தெளிவாயிட்டு யோசிச்சா ஒன்னுமே தேரல. கஷ்டப்பட்டு எட்டு விசயங்கள் கண்டுபிடிச்சிருக்கேன், படிச்சு தெரிஞ்சுக்குங்க...

1. எனக்கு அதிகம் நண்பர்கள் அப்படினு சொல்லிக்கனும்னு ஆசைதான். ஆனா என் நட்பு வட்டம் சின்னதுதான். எல்லோரையும் நண்பர்களா என்னால ஏத்துக்க முடியல. நம்ம அலைவரிசைக்கு யாரெல்லாம் ஒத்து வற்றாங்களோ (முன்ன், பின்ன்), அப்படி கொஞ்சம் யோசிக்கிறதுனால நண்பர்கள் எண்ணிக்கையில் குறைவு. எண்ணிக்கை முக்கியமில்லை, எப்பவுமே உண்மையான நண்பர்களா இருக்கனும் அப்படினு நினைக்கிறேன். நண்பர்கள் என்பதே பெருமை பட வேண்டிய விசயம் தானே!

2. அப்பப்ப இந்த நேர்மை குணம் வந்து படுத்தற பாடு நம்மால தாங்க முடியல. எல்லா நேரத்திலையும் நான் நேர்மையா இருக்கேனு சொல்ல முடியாது, சில சமயங்கள்ல நேர்மையா இருக்கனும் அப்படினு ரொம்ப உறுதியா, நேர்மையா செயல்படுவேன். யாருமே இல்லாத ரோட்டுல சிக்னல் போட்டிருக்குனு, கிராஸ் பண்ணாம நின்னுட்டிருப்பேன். எப்பவாதும் அதை நினைச்சு பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும்.

3. இப்படிதான் கவிதை எழுதுறேன் அப்படினு கொஞ்ச பேர்த்த (அதாங்க நம்ம நண்பர்களை) கொடுமை படுத்திகிட்டு இருக்கேன். சிலர் படிச்சுட்டு விதி நொந்துகிட்டு "சூப்பர்" அப்படினுட்டு போவாங்க. சிலர் ஒன்னும் சொல்றதில்லை. அவங்கள்லாம் ஒன்னா சேந்து அடிக்கப் போறதா சிலர் சொன்றாங்க.(கொஞ்சம் பயமாதான் இருக்கு). அடிவாங்கினாலும் நாம் கவுஜர் அப்படிங்கறது பெருமைபட விசயம் தானே!

4. அப்பா, அம்மாவுக்கு ரொம்ப நல்ல பிள்ளை நான். அத பண்ணாத, இத பண்ணாத அப்படினு கட்டுபாடுகள் போட்டு வளர்க்கப்படுகிற பிள்ளைகளுக்கு மத்தியில், எங்க வீட்ல கட்டுபாடுனு எதுவும் கிடையாது. என்மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காங்க. ஒரு சிலர் அவங்க வீட்டைபற்றி சொல்லும் போது நமக்கு இவ்வளவு சுதந்திரம் அப்படினு ரொம்ப பெருமையா இருக்கு.

5. எதையும் கொஞ்சம் சீக்கிரமா நம்பிடுவேன். இதனால சில சமயம் ஏமாந்தும் போயிருக்கேன்.

6. என்னால எதையும் மறைச்சு வைக்க முடியாது. சீக்கிரமாவே உளறிடுவேன். சாதாரணமா சொன்ன விசயத்த மறந்துடுவேன். ஆனா யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொன்ன மேட்டர் தான் மொதல்ல நம்ம ஞாபகத்துக்கு வரும். வார்த்தைக்கு வார்த்த அதான் வந்து நிக்கும். கடைசில சொல்லிட்டுதான் அய்யய்யோ சொல்லிட்டமேனு நினைப்பேன்.

7. நாட்டுக்கு பெரிய தொண்டு செய்யனும் அப்படினு எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. ஆனா நாம் பிறந்த ஊருக்கு, நாம் இங்கு தான் இருந்தோம் எனும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்துகொண்டே வருகிறது. இப்படி ஒரு எண்ணம் தோன்றியதே பெருமை தானே!

8.கடைசியா, அதாங்க எட்டாவதா, நான் பிளாக் எழுதினதே ஒரு பெருமையாதான் நினைக்கிறேன். பிளாக் எழுதலைனா இவ்ளோ(?!) நண்பர்கள் கிடைச்சிருப்பீங்களா?.

எட்டு போட:

1.
நந்தா

2.
இம்சை அரசி

3.
கமல்

4.
ஜி

5.
இராம்

6.
கோவி. கண்ணன்

7.
பாலா

8.
நாமக்கல் சிபி


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.


2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

பி.கு: இதுபோல் விளையாட்டை ஆரம்பிப்பவர்கள் 2,3 இது போல் சிறிய எண்ணாக கொடுக்கவும். அப்பாடி இந்த 8 முடிப்பதற்குள் .....அம்மாடியோவ் நம்மால முடியாது சாமி...