என் நினைவில்...

கல்லூரி நண்பன் கண்ணனுடன் நீண்ட நேரம் மடிக்கணினியில் சாட் செய்து விட்டு இப்பொழுது தான் கட்டிலில் சாய்ந்தேன். எங்களின் மற்றொரு நண்பன் அருணுக்கு திருமணம் என்று அவன் சொன்னதை மனதில் அசைப்போட்டப்படி படுத்துக்கிடந்தப்போது கல்லூரியில் நாங்கள் படித்தப்போது நடந்த அந்த இனிய நினைவுகள் மனதில் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று வெள்ளிக்கிழமை, 3.30 முதல் 4.30 வரை எந்த வகுப்பும் இல்லை. யாருக்கு எந்த துறையில் விருப்பமோ அதற்கு செல்லலாம் என சொல்லி இருந்தார்கள். சிலர் விளையாடச் செல்ல, சிலர் கணினி வகுப்புக்கு செல்ல, பலர் வகுப்பிலேயே உட்கார்ந்து அரட்டை கச்சேரி செய்வார்கள், எனக்கு அதில் விருப்பம் இருக்காது அதனால் நூலகத்திற்கு சென்றுவிடுவேன். அன்றும் அப்படிதான், எனக்கு பிடித்த வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது "ராஜா" என்று யாரோ அழைத்தார்கள். திரும்பி பார்த்தேன், ஒரு பெண் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். யார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"நீங்க தானே செகண்ட் இயர் சி.எஸ் ராஜா" என்றாள்.

"ம்" என்று தலையாட்டிவிட்டு என்ன என்பது போல் பார்த்தேன்.

"நான் மதி. ஃப்ஸ்ட் இயர் கெமிஸ்ட்ரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, போன வருட ஆண்டு மலர்ல உங்க கவிதை படிச்சேன், நல்லா இருக்கு" என்றாள்.

"நன்றி" சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

அதன் பின் அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது. மாதாமாதம் கல்லூரி மலரில் வரும் என் கவிதைகளை படித்துவிட்டு பாராட்டோ, விமர்சனமோ எதாவது ஒன்று சொல்வாள். நாட்கள் செல்ல செல்ல அவளுடைய விமர்சனங்களை நானும் எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

இப்படி இருக்கையில் ஒருநாள், நான் கேன்டினில் இருந்தேன். அப்போது தன் தோழிகளுடன் அங்கு வந்தாள். என்னை பார்த்துவிட்டு தனியே என்னிடம் பேச வந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தேன், அவளும் சிரித்துவிட்டு என் எதிரில் அமர்ந்தாள்.

"ராஜா, நீங்க தமிழ்மன்ற போட்டில கலந்துக்கலையா?. பேர் லிஸ்ட் பார்த்தேன், அதில் உங்க பேர் இல்லையே"

"இல்லை, கலந்துக்கல"

"ஏன் கலந்துக்கல"

"போட்டிக்காக நான் கவிதை எழுதறதில்லை. அதில்லாம என்னோட கவிதைய திருத்தினாவோ, தப்பு சொன்னாவோ எனக்கு பிடிக்காது-அதுனாலதான் கலந்துக்கல".

"அதெல்லாம் பாக்க முடியுமா?, அப்படி திருத்தங்கள் வந்தாதானே உங்களால இன்னும் சிறப்பா கவிதை எழுத முடியும். நீங்க கண்டிப்பா கலந்துக்கனும்."-என்று கூறிவிட்டு என்னுடைய பதிலை கூட எதிர்பாராமல் எழுந்து சென்று விட்டாள்.

அதுவரை எத்தனையோ பேர் சொல்லி மாறாத முடிவை மாற்றிக்கொண்டு, அடுத்த நாள் பெயர் கொடுத்தேன். அன்று மாலை நூலத்தில் இருந்தபோது அருகில் வந்து பேர் கொடுத்ததுக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அடுத்த வாரம் தமிழ்மன்ற விழாவில் கல்லூரியே கலைகட்டி இருந்தது. முதல் நாள் கவிதை, ஓவியம், நடனப்போட்டி என நடந்தது.

கவிதைப்போட்டிக்கு செல்லும்முன் வந்து வாழ்த்து சொல்லி அனுப்பினாள். அடுத்த நாள் காலை பேச்சுப்போட்டி, மாலையில் விழா நிறைவில் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. பேச்சுபோட்டி அரங்கில் ஓரளவு கூட்டம் இருந்தது. நிர்வாகக்குழுவில் இருந்த கண்ணன், தமிழ் அய்யாவை பார்க்க வேண்டி இருந்ததால் நானும் அவனுடன் அங்கு சென்றேன். பேசிவிட்டு திரும்பும் போது மேடையை பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கே மதி உட்கார்ந்திருந்தாள். இவள் பேச்சுப்போட்டியில் இருக்கிறாளா? முன்பே தெரியாமல் போய் விட்டதே, பேசி முடித்துவிட்டாளோ என்னவோ தெரியவில்லையே என யோசித்துக்கொண்டே, கண்ணனை, நீ போடா நான் கொஞ்ச நேரம் இங்கிருந்துட்டு
வர்ரேன் என்றேன். அவனுக்கு அவசர வேலை இருந்ததால் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, அப்போதுதான் மதி பேசத்தொடங்கினாள். கணீரென்ற குரலுடன் அதே சமயம் இனிமையாகவும் பேசினாள். இதுநாள் வரை எந்த பேச்சுப்போட்டியையும் நான் முழுமையாக கேட்டதில்லை. அன்று முடியும் வரை இருந்தேன். கவிதைக்கு எனக்கு முதல் பரிசும், சிறப்பான மேடைப்பேச்சு என்று மதிக்கு கேடயமும் வழங்கினார்கள். மாலை கலைநிகழ்ச்சிகள் முடிந்தது, மதியை பார்க்க முடியவில்லை.

திங்கள் கல்லூரி வந்ததும் சக வகுப்பு நண்பர்கள், மற்ற நண்பர்கள் என வாழ்த்துக்கள் கூறினர். மதியிடம் இருந்து எதிர்பார்த்தேன், ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. மாலை வழக்கம் போல் நூலகத்தில் இருந்தபோது, ஹலோ வாழ்த்துக்கள் என்று ஒரு வாழ்த்து அட்டையை நீட்டினாள். கொஞ்சம் வெளியில போய் பேசலாமா என்றாள்.

வாழ்த்து அட்டையை வாங்கிக்கொண்டு கேன்டின் சென்றோம். நீங்க எழுதிய கவிதையை பார்த்தேன் சூப்பரா இருந்தது என்றாள். எப்படி நீ பார்த்தாய் என்றேன். அப்போதுதான் தெரிந்தது அவளுடைய அப்பா தமிழ் ஆசிரியர் என்றும், அவருடைய நண்பர்தான் இங்கு தமிழ்துறை பேராசிரியர் என்பதும்.

நீங்க பேச்சுபோட்டில கலந்துக்கறத பத்தி சொல்லவே இல்லை என்றேன். சொல்லாட்டி என்னா. அதான் அன்னிக்கு பாத்தீங்களே என்றாள். நீங்க கடைசீல நின்னு கேட்டத நான் பாத்தேன். அங்கு வந்துட்டு போனபோது, எங்க பாக்காம போயிடுவீங்களோனு நினைச்சேன் நல்லவேளை பாத்துட்டீங்க என்றாள்.

உங்க பேச்சு நல்லாவே இருந்தது. அதெப்படிங்க துளி கூட பயமில்லாம அவ்ளோ தெளிவா பேசுறீங்க. எனக்கெல்லாம் மேடை ஏறினாவே பயம் வந்துடும் என்றேன்.

பள்ளில இருந்தே பழக்கமாயிடுச்சு, அதனால ஒன்னும் தெரியாது என்றாள்.

அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தோம். நிறையே பேசினோம்.

ஒரு நாள் ஏன் நீங்க எதிலையுமே அதிகம் கலந்துக்கிறது இல்லை என்றாள். நான் மௌனமாய் இருக்க அவளே தொடர்ந்தாள். ஏன் திறமைய வச்சுகிட்டு வேஸ்ட் பண்ணனும் என்று கூறினாள்.

அதன் பின் நானும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். பிற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளுக்கெல்லாம் சென்று வந்தோம். பல்கலைகழக அளவில் நடந்த தமிழ்துறை போட்டியில் கலந்துகொண்டு கவிதையில் முதல் பரிசு பெற்றேன். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என அவள் கலந்துகொள்ளவில்லை.

அன்று இரவு தான் ஒரு கடிதம் எழுதினேன். அன்பு மதிக்கு என்று ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்றே தெரியவில்லை, சுற்றி வளைத்து எழுதுவதிலும் விருப்பமில்லை. "பரிசு பெற்றது நானாக இருக்கலாம், முழுக்காரணமும் நீதான். அதற்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை, இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன்" என்று எழுதி மடித்து வாழ்த்து அட்டையில் வைத்துக்கொண்டேன்.

ஒரு வார விடுமுறைக்கு பின் அன்றுதான் கல்லூரி வந்தாள். எப்படியும் வாழ்த்துசொல்ல வருவாள் என காத்திருக்க ஆரம்பித்தேன். அதே போல் மாலையில் நூலகத்தில் இருந்த போது வந்தாள், வாழ்த்து சொல்லிவிட்டு செல்லும் போது அந்த வாழ்த்து கவரை கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.

வீட்டிலிருந்து கொண்டுவந்து நிறைய புத்தகங்கள் படிக்க கொடுப்பாள். முன்பெல்லாம் அடிக்கடி நண்பர்களுடன் தண்ணி அடிப்பேன், அது அப்படியே குறைந்து விட்டது. இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் கூட புத்தகம் படித்தே சென்றுவிடுகிறது.

ஒருநாள் ராஜா, நீங்க உங்க கவிதை எல்லாம் தொகுத்து வச்சிருக்கீங்களா என கேட்டாள். ஏன் என்றேன். அதுல இருந்து தேர்ந்தெடுத்து வார பத்திரிக்கைக்கு அனுப்பலாம் என்றாள். சரி என்று என் கவிதை நோட்டுகளை அவளிடம் கொடுத்து நீங்களே அனுப்பிடுங்க என்றேன்.
இனிமே இந்த "ங்க" போட்டு கூப்பிடறதெல்லாம் வேணாம், "நீ"னே கூப்பிடுங்க, இல்லைனா மதி-னு கூப்பிடுங்க என சொல்லிவிட்டு கவிதை நோட்டுகளை எடுத்துகொண்டு சென்றுவிட்டாள்.

அடுத்த வாரம் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும், அவற்றை அனுப்பவா என்றும் கேட்டுவிட்டு நோட்டுக்ளை திருப்பிக்கொடுத்தாள். ஒரு மாதம் கழித்து விடுமுறையில் ஞாயிற்றுகிழமை ஹாஸ்டலுக்கு போன் செய்தாள். ராஜா இந்த வாரம் உங்க
கவிதைதான் வார பத்திரிக்கைல வந்திருக்கு என கூறிவிட்டு வாழ்த்தும் கூறினாள். நாளைக்கு காலைல 9.45-க்கு கேன்டீன் வாங்க நான் வர்ரேன், அந்த புத்தகமும் எடுத்துட்டு வரேன் என்று கூறினாள்.

அடுத்த நாள் திங்கள் காலை, 9.35 இருக்கும் கல்லூரியே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் மெயின்ரோட்டுக்கு ஓடினார்கள். யாரோ ஒரு மாணவி அடிபட்டு விட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சொன்னார்கள். 10 மணி ஆகியும் மதி வராததால் கிளம்பலாம் என எழுந்தேன், வாசலில் மதியின் தோழி மேனகா ஓடிவருவது தெரிந்தது. அருகில் வந்தவள் மூச்சிரைக்க ராஜா, மதிக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு, ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்க என்றாள்.

எனக்குள் ஏதோ உலகமே இருண்டது போல் ஆனது. பின் சுதாரித்துக்கொண்டு அறை நண்பனை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றேன். அங்கு மதியின் அப்பா, அம்மா, தங்கை, சில கல்லூரி ஆசிரியர்கள் என எல்லோரும் சோகமாக நின்று கொண்டிருந்தனர். ICU-விறகு டாக்டர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அரை மணி நேரம் இருக்கும் வெளியே வந்த டாக்டர் ஏதோ சொல்ல, ராஜா என அழைத்தார்கள், மதி கூப்பிடுவதாக சொன்னார்கள். உள்ளே சென்றேன்.

மதி, என் மதி காலையில் பூத்த புது ரோஜாவாக இருக்க வேண்டிய மதி, கசங்கி, வாடி போய் படுக்கையில் கிடந்தாள். தலை முழுவது கட்டு போட்டிருந்தார்கள். அப்போதும் ரத்தம் கசிந்திருந்தது. அவளை பார்த்தது என்னை மீறி அழுகை வந்தது. அருகில் சென்றேன். என்
கையை பிடித்து தன் கையுடன் வைத்துக்கொண்டாள். ஏதோ பேச முயற்ச்சித்தாள் ஆனால் எதுவும் பேச முடியவில்லை.

லேசாக கண்கள் செறுகியது. மதி... மதி கையை லேசாய இறுக்கினேன்,விழித்துப்பார்த்தாள். அந்த பார்வையில் நான் உன்னை விட்டு போகப்போறேண்டா என்பது போல் துயரம் தெரிந்தது, ஒரு கையை உயர்த்தி "நல்லா இரு" என்பது போல சைகை செய்தாள். பின் என்
கையை இறுக பற்றிக்கொண்டு கண்னை மூடினாள். அதன் பின் அவள் விழிக்கவே இல்லை...

அவள் இறந்து ஒரு மாதம் இருக்கும், ஒரு நாள் தமிழ் அய்யா அழைத்தார் என அவரை பார்க்க சென்றேன். மதியோட அப்பா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னார் என்றார்.
மாலையில் தமிழ் அய்யாவுடன் மதி வீட்டுக்கு சென்றேன். என்னை பற்றிய எல்லா விசயங்களையும் கேட்டார். மதி அடிக்கடி சொல்வா, ரொம்ப அமைதியான பையன்பா. நல்லா கவிதை எழுதுவ என்று சொல்வாள் என்றார். அவள் எழுதிக்கொண்டிருந்த கவிதை டைரியை என்னிடம் கொடுத்து இதில் தினமும் ஒரு கவிதையாவது உங்கள பத்தி எழுதுவா என்றார். மதி இல்லைனு நினைக்காதப்பா, நீ அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போகனும் என்று கேட்டுக்கொண்டார்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாள் ஆகியது. கவிதை எழுதுவேன், எல்லாம் மதியைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பின் போட்டியில் கலந்து கொள்வதையே விட்டுவிட்டேன்.

உண்மைய சொல்லனும்னா நான் இன்னிக்கு இங்க வந்திருக்கிறதுக்கு முக்கிய காரணம் மதிதான். ஏன்னா அவ இறந்த பிறகு கொஞ்ச நாள் எதிலையுமே விருப்பம் இல்லாம இருந்தேன். அவ சொன்னபடி நீ இந்த காலேஜ் விட்டு போகும் போது பெருமையோட போகனும்னு சொன்னா, அவ கவிதைய வச்சு சொன்னா, இனிமே அது முடியாதுங்கறதுனால படிக்க ஆரம்பிச்சேன், காலேஜ் ஃபைனல் இயர்ல நான் தான் ஃப்ஸ்ட் வந்தேன். நல்ல வேலையும் அமைஞ்சது...

இன்னிக்கும் மதியோட ஆசைப்படி கவிதை எழுதிட்டுதான் இருக்கேன். ஆனா எங்கையும் அனுப்பறதில்லை. பிரசுரமான என்னோட மொத மற்றும் கடைசி கவிதையும் அவ அனுப்பின அந்த கவிதைதான். ஆனால் இந்த நினைவுகள் தொடரும்....

PIT போட்டிக்கு - வட்டம்



காதலுக்காக...












என் இதயம் சொல்லவில்லையா...



அழகாக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் உட்கார்ந்திருந்த கவின் ஒவ்வொரு புல்லாக பிடுங்கிக்கொண்டிருந்தான். அவன் கண் அடிக்கடி வாட்சையும், வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தது. அஞ்சு நிமிசத்துக்குள்ள 15 தடவ டைம் பார்த்திருப்பான். ச்ச இந்த டைம் போகவே மாட்டிங்குதே என்று முணுமுணுத்துக்கொண்டே பூங்காவின் வாசலைப்பார்த்த போது, அங்கே நிஷா அழகாய் தாவணியில் வந்து கொண்டிருந்தாள்.

அதுவரை "அவள் வருவாளா? என ஏங்கிக்கொண்டிருந்த மனம் அவளை பார்த்ததும் படபடப்பாகியது. ச்ச ஏன் இப்படி டென்சன் ஆகுது என நொந்துகொண்டே அவளைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்து, என்ன இன்னிக்கு ஆச்சர்யமா இருக்கு, ஐயா சீக்கிரமே வந்துட்டீங்க என கூறிக்கொண்டே அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள்.

சாய்ந்திரம் ஆயிடுச்சு, ஆனா இன்னும் எப்படி வெயில் அடிக்குது பாரு, இதுல டிராபிக் வேற, வர்ரதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு பா என்று வியர்வையை துடைத்துக்கொண்டாள்.

இதுவே வேறெப்போதாவது இருந்திருந்தா, அவள் வியர்வைக்கும் ஒரு கவிதை சொல்லி இருப்பான். ஆனால், பேச வார்த்தையே இல்லாதது போல் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏண்டா ஒரு மாதிரி டல்லா இருக்க?"

அதற்குள் நிஷாவின் மொபைல் சிணுங்கியது. இவனுக்கு மிகவும் பிடித்த "முதற்கனவே" பாடலைதான் அவள் ரிங்டோனாக வைத்திருந்தாள். ஆனால் இப்போது அதுவே வெறுப்பாக இருந்தது. அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, பின்பக்கம் இருந்த குளத்தில் குழந்தைகள் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏய் வெனஸ்டே கவிதா பர்த்டே பார்ட்டி சூப்பரா இருந்துச்சு தெரியுமா, நீ தான் மிஸ் பண்ணிட்ட..."

"ம்..."

"அவளுக்கு கிப்ட் வாங்க போனப்போ ரோஸ் ட்ராயிங் பார்த்தேன். ரோஸ்னா உனக்கு ரொம்ப பிடிக்குமேனு வாங்கிட்டு வந்துட்டேன்" - என ஒரு பெட்டியை கொடுத்தாள்.

"டேய், நான் சொன்னேனில்ல அந்த புக் படிச்சு முடிச்சுட்டேன், சூப்பரா இருக்கு, நீயும் படி" என்று ஒரு கவரை கொடுத்தாள்.

அப்படியே அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள், இவன் அமைதியாகவே இருந்தான், அவ்வப்போது கேள்விக்கு மட்டும் எதாவது பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

சரிடா நான் கிளம்புறேன், அம்மா எங்கயோ வெளியில போகணும்னு சீக்கிரம் வரச் சொன்னாங்க. நான் கிளம்பறேன் என எழப்போனவளிடம்...

"ஏய் நிஷா"

"ம். என்ன?"

"எதுவுமே சொல்லல."

"என்ன சொல்ல சொல்ற."

"நான் அன்னிக்கு கொடுத்த புக் பாத்தியா இல்லையா?"

"ம்.பாத்தேனே."

"அப்புறம்..."

"அப்புறம்னா?"

"நீ எதுவும் சொல்லலையே."

"அப்படியா. நான் எதுவும் சொல்லலியா?"

"சரி...
வீட்டுக்கு போய் நான் கொடுத்த புக்க மெதுவா படி எல்லாம் புரியும்" - என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அவசர அவசரமாக அங்கேயே பிரித்தான்.

முதல் பக்கத்திலேயே

நிஷா
கவின்
.

என்று இருந்தது.

அதற்குள் நிஷா-விடம் இருந்து குறுஞ்செய்தி.
பார்த்தான்.

தவியாய் தவித்தவனே
உனக்கு பிடித்த
உடைதானே அணிந்திருந்தேன்.
புரியாமல்
தவித்தது ஏனோ?


என்றிருந்தது...

அட ஆம, இன்னிக்கு மாம்பழ கலர் தாவணி போட்டிருந்தாளே என யோசிக்கும் போதே அவனையறியாமல் லேசாய் சிரித்தான்.

புத்தகத்தின் அடுத்த பக்கத்தில்

கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...


என்றிருந்தது.

நீங்களே பாருங்க - நான் என்னத்த சொல்ல???

மரங்கள்



யார்மீது கோபமோ
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.
நீண்ட சாலையில்
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.
வளர்ந்துவிட்ட
நகரத்தின் அடையாளமாய்
நடமாடும் மனித இயந்திரங்கள்
காங்கிரீட் கட்டிடங்கள்.
வாகன நெரிசலும், புகையும்...
வெகுநேரமாக சுற்றுகிறேன்
எங்கும் தென்படவில்லை
மரமெனும் மகத்துவம்
மெதுவாக புரிய ஆரம்பித்தது
சூரியனின் கோபம்.