என் நினைவில்...

கல்லூரி நண்பன் கண்ணனுடன் நீண்ட நேரம் மடிக்கணினியில் சாட் செய்து விட்டு இப்பொழுது தான் கட்டிலில் சாய்ந்தேன். எங்களின் மற்றொரு நண்பன் அருணுக்கு திருமணம் என்று அவன் சொன்னதை மனதில் அசைப்போட்டப்படி படுத்துக்கிடந்தப்போது கல்லூரியில் நாங்கள் படித்தப்போது நடந்த அந்த இனிய நினைவுகள் மனதில் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று வெள்ளிக்கிழமை, 3.30 முதல் 4.30 வரை எந்த வகுப்பும் இல்லை. யாருக்கு எந்த துறையில் விருப்பமோ அதற்கு செல்லலாம் என சொல்லி இருந்தார்கள். சிலர் விளையாடச் செல்ல, சிலர் கணினி வகுப்புக்கு செல்ல, பலர் வகுப்பிலேயே உட்கார்ந்து அரட்டை கச்சேரி செய்வார்கள், எனக்கு அதில் விருப்பம் இருக்காது அதனால் நூலகத்திற்கு சென்றுவிடுவேன். அன்றும் அப்படிதான், எனக்கு பிடித்த வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது "ராஜா" என்று யாரோ அழைத்தார்கள். திரும்பி பார்த்தேன், ஒரு பெண் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். யார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே..

"நீங்க தானே செகண்ட் இயர் சி.எஸ் ராஜா" என்றாள்.

"ம்" என்று தலையாட்டிவிட்டு என்ன என்பது போல் பார்த்தேன்.

"நான் மதி. ஃப்ஸ்ட் இயர் கெமிஸ்ட்ரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, போன வருட ஆண்டு மலர்ல உங்க கவிதை படிச்சேன், நல்லா இருக்கு" என்றாள்.

"நன்றி" சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

அதன் பின் அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது. மாதாமாதம் கல்லூரி மலரில் வரும் என் கவிதைகளை படித்துவிட்டு பாராட்டோ, விமர்சனமோ எதாவது ஒன்று சொல்வாள். நாட்கள் செல்ல செல்ல அவளுடைய விமர்சனங்களை நானும் எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

இப்படி இருக்கையில் ஒருநாள், நான் கேன்டினில் இருந்தேன். அப்போது தன் தோழிகளுடன் அங்கு வந்தாள். என்னை பார்த்துவிட்டு தனியே என்னிடம் பேச வந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தேன், அவளும் சிரித்துவிட்டு என் எதிரில் அமர்ந்தாள்.

"ராஜா, நீங்க தமிழ்மன்ற போட்டில கலந்துக்கலையா?. பேர் லிஸ்ட் பார்த்தேன், அதில் உங்க பேர் இல்லையே"

"இல்லை, கலந்துக்கல"

"ஏன் கலந்துக்கல"

"போட்டிக்காக நான் கவிதை எழுதறதில்லை. அதில்லாம என்னோட கவிதைய திருத்தினாவோ, தப்பு சொன்னாவோ எனக்கு பிடிக்காது-அதுனாலதான் கலந்துக்கல".

"அதெல்லாம் பாக்க முடியுமா?, அப்படி திருத்தங்கள் வந்தாதானே உங்களால இன்னும் சிறப்பா கவிதை எழுத முடியும். நீங்க கண்டிப்பா கலந்துக்கனும்."-என்று கூறிவிட்டு என்னுடைய பதிலை கூட எதிர்பாராமல் எழுந்து சென்று விட்டாள்.

அதுவரை எத்தனையோ பேர் சொல்லி மாறாத முடிவை மாற்றிக்கொண்டு, அடுத்த நாள் பெயர் கொடுத்தேன். அன்று மாலை நூலத்தில் இருந்தபோது அருகில் வந்து பேர் கொடுத்ததுக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அடுத்த வாரம் தமிழ்மன்ற விழாவில் கல்லூரியே கலைகட்டி இருந்தது. முதல் நாள் கவிதை, ஓவியம், நடனப்போட்டி என நடந்தது.

கவிதைப்போட்டிக்கு செல்லும்முன் வந்து வாழ்த்து சொல்லி அனுப்பினாள். அடுத்த நாள் காலை பேச்சுப்போட்டி, மாலையில் விழா நிறைவில் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. பேச்சுபோட்டி அரங்கில் ஓரளவு கூட்டம் இருந்தது. நிர்வாகக்குழுவில் இருந்த கண்ணன், தமிழ் அய்யாவை பார்க்க வேண்டி இருந்ததால் நானும் அவனுடன் அங்கு சென்றேன். பேசிவிட்டு திரும்பும் போது மேடையை பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கே மதி உட்கார்ந்திருந்தாள். இவள் பேச்சுப்போட்டியில் இருக்கிறாளா? முன்பே தெரியாமல் போய் விட்டதே, பேசி முடித்துவிட்டாளோ என்னவோ தெரியவில்லையே என யோசித்துக்கொண்டே, கண்ணனை, நீ போடா நான் கொஞ்ச நேரம் இங்கிருந்துட்டு
வர்ரேன் என்றேன். அவனுக்கு அவசர வேலை இருந்ததால் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, அப்போதுதான் மதி பேசத்தொடங்கினாள். கணீரென்ற குரலுடன் அதே சமயம் இனிமையாகவும் பேசினாள். இதுநாள் வரை எந்த பேச்சுப்போட்டியையும் நான் முழுமையாக கேட்டதில்லை. அன்று முடியும் வரை இருந்தேன். கவிதைக்கு எனக்கு முதல் பரிசும், சிறப்பான மேடைப்பேச்சு என்று மதிக்கு கேடயமும் வழங்கினார்கள். மாலை கலைநிகழ்ச்சிகள் முடிந்தது, மதியை பார்க்க முடியவில்லை.

திங்கள் கல்லூரி வந்ததும் சக வகுப்பு நண்பர்கள், மற்ற நண்பர்கள் என வாழ்த்துக்கள் கூறினர். மதியிடம் இருந்து எதிர்பார்த்தேன், ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. மாலை வழக்கம் போல் நூலகத்தில் இருந்தபோது, ஹலோ வாழ்த்துக்கள் என்று ஒரு வாழ்த்து அட்டையை நீட்டினாள். கொஞ்சம் வெளியில போய் பேசலாமா என்றாள்.

வாழ்த்து அட்டையை வாங்கிக்கொண்டு கேன்டின் சென்றோம். நீங்க எழுதிய கவிதையை பார்த்தேன் சூப்பரா இருந்தது என்றாள். எப்படி நீ பார்த்தாய் என்றேன். அப்போதுதான் தெரிந்தது அவளுடைய அப்பா தமிழ் ஆசிரியர் என்றும், அவருடைய நண்பர்தான் இங்கு தமிழ்துறை பேராசிரியர் என்பதும்.

நீங்க பேச்சுபோட்டில கலந்துக்கறத பத்தி சொல்லவே இல்லை என்றேன். சொல்லாட்டி என்னா. அதான் அன்னிக்கு பாத்தீங்களே என்றாள். நீங்க கடைசீல நின்னு கேட்டத நான் பாத்தேன். அங்கு வந்துட்டு போனபோது, எங்க பாக்காம போயிடுவீங்களோனு நினைச்சேன் நல்லவேளை பாத்துட்டீங்க என்றாள்.

உங்க பேச்சு நல்லாவே இருந்தது. அதெப்படிங்க துளி கூட பயமில்லாம அவ்ளோ தெளிவா பேசுறீங்க. எனக்கெல்லாம் மேடை ஏறினாவே பயம் வந்துடும் என்றேன்.

பள்ளில இருந்தே பழக்கமாயிடுச்சு, அதனால ஒன்னும் தெரியாது என்றாள்.

அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தோம். நிறையே பேசினோம்.

ஒரு நாள் ஏன் நீங்க எதிலையுமே அதிகம் கலந்துக்கிறது இல்லை என்றாள். நான் மௌனமாய் இருக்க அவளே தொடர்ந்தாள். ஏன் திறமைய வச்சுகிட்டு வேஸ்ட் பண்ணனும் என்று கூறினாள்.

அதன் பின் நானும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். பிற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளுக்கெல்லாம் சென்று வந்தோம். பல்கலைகழக அளவில் நடந்த தமிழ்துறை போட்டியில் கலந்துகொண்டு கவிதையில் முதல் பரிசு பெற்றேன். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என அவள் கலந்துகொள்ளவில்லை.

அன்று இரவு தான் ஒரு கடிதம் எழுதினேன். அன்பு மதிக்கு என்று ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்றே தெரியவில்லை, சுற்றி வளைத்து எழுதுவதிலும் விருப்பமில்லை. "பரிசு பெற்றது நானாக இருக்கலாம், முழுக்காரணமும் நீதான். அதற்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை, இதை எப்போதும் நான் மறக்க மாட்டேன்" என்று எழுதி மடித்து வாழ்த்து அட்டையில் வைத்துக்கொண்டேன்.

ஒரு வார விடுமுறைக்கு பின் அன்றுதான் கல்லூரி வந்தாள். எப்படியும் வாழ்த்துசொல்ல வருவாள் என காத்திருக்க ஆரம்பித்தேன். அதே போல் மாலையில் நூலகத்தில் இருந்த போது வந்தாள், வாழ்த்து சொல்லிவிட்டு செல்லும் போது அந்த வாழ்த்து கவரை கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.

வீட்டிலிருந்து கொண்டுவந்து நிறைய புத்தகங்கள் படிக்க கொடுப்பாள். முன்பெல்லாம் அடிக்கடி நண்பர்களுடன் தண்ணி அடிப்பேன், அது அப்படியே குறைந்து விட்டது. இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் கூட புத்தகம் படித்தே சென்றுவிடுகிறது.

ஒருநாள் ராஜா, நீங்க உங்க கவிதை எல்லாம் தொகுத்து வச்சிருக்கீங்களா என கேட்டாள். ஏன் என்றேன். அதுல இருந்து தேர்ந்தெடுத்து வார பத்திரிக்கைக்கு அனுப்பலாம் என்றாள். சரி என்று என் கவிதை நோட்டுகளை அவளிடம் கொடுத்து நீங்களே அனுப்பிடுங்க என்றேன்.
இனிமே இந்த "ங்க" போட்டு கூப்பிடறதெல்லாம் வேணாம், "நீ"னே கூப்பிடுங்க, இல்லைனா மதி-னு கூப்பிடுங்க என சொல்லிவிட்டு கவிதை நோட்டுகளை எடுத்துகொண்டு சென்றுவிட்டாள்.

அடுத்த வாரம் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும், அவற்றை அனுப்பவா என்றும் கேட்டுவிட்டு நோட்டுக்ளை திருப்பிக்கொடுத்தாள். ஒரு மாதம் கழித்து விடுமுறையில் ஞாயிற்றுகிழமை ஹாஸ்டலுக்கு போன் செய்தாள். ராஜா இந்த வாரம் உங்க
கவிதைதான் வார பத்திரிக்கைல வந்திருக்கு என கூறிவிட்டு வாழ்த்தும் கூறினாள். நாளைக்கு காலைல 9.45-க்கு கேன்டீன் வாங்க நான் வர்ரேன், அந்த புத்தகமும் எடுத்துட்டு வரேன் என்று கூறினாள்.

அடுத்த நாள் திங்கள் காலை, 9.35 இருக்கும் கல்லூரியே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் மெயின்ரோட்டுக்கு ஓடினார்கள். யாரோ ஒரு மாணவி அடிபட்டு விட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சொன்னார்கள். 10 மணி ஆகியும் மதி வராததால் கிளம்பலாம் என எழுந்தேன், வாசலில் மதியின் தோழி மேனகா ஓடிவருவது தெரிந்தது. அருகில் வந்தவள் மூச்சிரைக்க ராஜா, மதிக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு, ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்க என்றாள்.

எனக்குள் ஏதோ உலகமே இருண்டது போல் ஆனது. பின் சுதாரித்துக்கொண்டு அறை நண்பனை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றேன். அங்கு மதியின் அப்பா, அம்மா, தங்கை, சில கல்லூரி ஆசிரியர்கள் என எல்லோரும் சோகமாக நின்று கொண்டிருந்தனர். ICU-விறகு டாக்டர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அரை மணி நேரம் இருக்கும் வெளியே வந்த டாக்டர் ஏதோ சொல்ல, ராஜா என அழைத்தார்கள், மதி கூப்பிடுவதாக சொன்னார்கள். உள்ளே சென்றேன்.

மதி, என் மதி காலையில் பூத்த புது ரோஜாவாக இருக்க வேண்டிய மதி, கசங்கி, வாடி போய் படுக்கையில் கிடந்தாள். தலை முழுவது கட்டு போட்டிருந்தார்கள். அப்போதும் ரத்தம் கசிந்திருந்தது. அவளை பார்த்தது என்னை மீறி அழுகை வந்தது. அருகில் சென்றேன். என்
கையை பிடித்து தன் கையுடன் வைத்துக்கொண்டாள். ஏதோ பேச முயற்ச்சித்தாள் ஆனால் எதுவும் பேச முடியவில்லை.

லேசாக கண்கள் செறுகியது. மதி... மதி கையை லேசாய இறுக்கினேன்,விழித்துப்பார்த்தாள். அந்த பார்வையில் நான் உன்னை விட்டு போகப்போறேண்டா என்பது போல் துயரம் தெரிந்தது, ஒரு கையை உயர்த்தி "நல்லா இரு" என்பது போல சைகை செய்தாள். பின் என்
கையை இறுக பற்றிக்கொண்டு கண்னை மூடினாள். அதன் பின் அவள் விழிக்கவே இல்லை...

அவள் இறந்து ஒரு மாதம் இருக்கும், ஒரு நாள் தமிழ் அய்யா அழைத்தார் என அவரை பார்க்க சென்றேன். மதியோட அப்பா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னார் என்றார்.
மாலையில் தமிழ் அய்யாவுடன் மதி வீட்டுக்கு சென்றேன். என்னை பற்றிய எல்லா விசயங்களையும் கேட்டார். மதி அடிக்கடி சொல்வா, ரொம்ப அமைதியான பையன்பா. நல்லா கவிதை எழுதுவ என்று சொல்வாள் என்றார். அவள் எழுதிக்கொண்டிருந்த கவிதை டைரியை என்னிடம் கொடுத்து இதில் தினமும் ஒரு கவிதையாவது உங்கள பத்தி எழுதுவா என்றார். மதி இல்லைனு நினைக்காதப்பா, நீ அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போகனும் என்று கேட்டுக்கொண்டார்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாள் ஆகியது. கவிதை எழுதுவேன், எல்லாம் மதியைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பின் போட்டியில் கலந்து கொள்வதையே விட்டுவிட்டேன்.

உண்மைய சொல்லனும்னா நான் இன்னிக்கு இங்க வந்திருக்கிறதுக்கு முக்கிய காரணம் மதிதான். ஏன்னா அவ இறந்த பிறகு கொஞ்ச நாள் எதிலையுமே விருப்பம் இல்லாம இருந்தேன். அவ சொன்னபடி நீ இந்த காலேஜ் விட்டு போகும் போது பெருமையோட போகனும்னு சொன்னா, அவ கவிதைய வச்சு சொன்னா, இனிமே அது முடியாதுங்கறதுனால படிக்க ஆரம்பிச்சேன், காலேஜ் ஃபைனல் இயர்ல நான் தான் ஃப்ஸ்ட் வந்தேன். நல்ல வேலையும் அமைஞ்சது...

இன்னிக்கும் மதியோட ஆசைப்படி கவிதை எழுதிட்டுதான் இருக்கேன். ஆனா எங்கையும் அனுப்பறதில்லை. பிரசுரமான என்னோட மொத மற்றும் கடைசி கவிதையும் அவ அனுப்பின அந்த கவிதைதான். ஆனால் இந்த நினைவுகள் தொடரும்....

PIT போட்டிக்கு - வட்டம்



காதலுக்காக...












என் இதயம் சொல்லவில்லையா...



அழகாக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் உட்கார்ந்திருந்த கவின் ஒவ்வொரு புல்லாக பிடுங்கிக்கொண்டிருந்தான். அவன் கண் அடிக்கடி வாட்சையும், வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தது. அஞ்சு நிமிசத்துக்குள்ள 15 தடவ டைம் பார்த்திருப்பான். ச்ச இந்த டைம் போகவே மாட்டிங்குதே என்று முணுமுணுத்துக்கொண்டே பூங்காவின் வாசலைப்பார்த்த போது, அங்கே நிஷா அழகாய் தாவணியில் வந்து கொண்டிருந்தாள்.

அதுவரை "அவள் வருவாளா? என ஏங்கிக்கொண்டிருந்த மனம் அவளை பார்த்ததும் படபடப்பாகியது. ச்ச ஏன் இப்படி டென்சன் ஆகுது என நொந்துகொண்டே அவளைப் பார்த்து செயற்கையாய் புன்னகைத்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்து, என்ன இன்னிக்கு ஆச்சர்யமா இருக்கு, ஐயா சீக்கிரமே வந்துட்டீங்க என கூறிக்கொண்டே அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள்.

சாய்ந்திரம் ஆயிடுச்சு, ஆனா இன்னும் எப்படி வெயில் அடிக்குது பாரு, இதுல டிராபிக் வேற, வர்ரதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு பா என்று வியர்வையை துடைத்துக்கொண்டாள்.

இதுவே வேறெப்போதாவது இருந்திருந்தா, அவள் வியர்வைக்கும் ஒரு கவிதை சொல்லி இருப்பான். ஆனால், பேச வார்த்தையே இல்லாதது போல் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏண்டா ஒரு மாதிரி டல்லா இருக்க?"

அதற்குள் நிஷாவின் மொபைல் சிணுங்கியது. இவனுக்கு மிகவும் பிடித்த "முதற்கனவே" பாடலைதான் அவள் ரிங்டோனாக வைத்திருந்தாள். ஆனால் இப்போது அதுவே வெறுப்பாக இருந்தது. அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, பின்பக்கம் இருந்த குளத்தில் குழந்தைகள் கல்லெறிந்து விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏய் வெனஸ்டே கவிதா பர்த்டே பார்ட்டி சூப்பரா இருந்துச்சு தெரியுமா, நீ தான் மிஸ் பண்ணிட்ட..."

"ம்..."

"அவளுக்கு கிப்ட் வாங்க போனப்போ ரோஸ் ட்ராயிங் பார்த்தேன். ரோஸ்னா உனக்கு ரொம்ப பிடிக்குமேனு வாங்கிட்டு வந்துட்டேன்" - என ஒரு பெட்டியை கொடுத்தாள்.

"டேய், நான் சொன்னேனில்ல அந்த புக் படிச்சு முடிச்சுட்டேன், சூப்பரா இருக்கு, நீயும் படி" என்று ஒரு கவரை கொடுத்தாள்.

அப்படியே அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள், இவன் அமைதியாகவே இருந்தான், அவ்வப்போது கேள்விக்கு மட்டும் எதாவது பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

சரிடா நான் கிளம்புறேன், அம்மா எங்கயோ வெளியில போகணும்னு சீக்கிரம் வரச் சொன்னாங்க. நான் கிளம்பறேன் என எழப்போனவளிடம்...

"ஏய் நிஷா"

"ம். என்ன?"

"எதுவுமே சொல்லல."

"என்ன சொல்ல சொல்ற."

"நான் அன்னிக்கு கொடுத்த புக் பாத்தியா இல்லையா?"

"ம்.பாத்தேனே."

"அப்புறம்..."

"அப்புறம்னா?"

"நீ எதுவும் சொல்லலையே."

"அப்படியா. நான் எதுவும் சொல்லலியா?"

"சரி...
வீட்டுக்கு போய் நான் கொடுத்த புக்க மெதுவா படி எல்லாம் புரியும்" - என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அவசர அவசரமாக அங்கேயே பிரித்தான்.

முதல் பக்கத்திலேயே

நிஷா
கவின்
.

என்று இருந்தது.

அதற்குள் நிஷா-விடம் இருந்து குறுஞ்செய்தி.
பார்த்தான்.

தவியாய் தவித்தவனே
உனக்கு பிடித்த
உடைதானே அணிந்திருந்தேன்.
புரியாமல்
தவித்தது ஏனோ?


என்றிருந்தது...

அட ஆம, இன்னிக்கு மாம்பழ கலர் தாவணி போட்டிருந்தாளே என யோசிக்கும் போதே அவனையறியாமல் லேசாய் சிரித்தான்.

புத்தகத்தின் அடுத்த பக்கத்தில்

கடிதம் கொடுத்து
காதல் சொல்லவும் வேண்டுமோ?
நீ வைத்திருக்கும்
என் இதயம் சொல்லவில்லையா...


என்றிருந்தது.

நீங்களே பாருங்க - நான் என்னத்த சொல்ல???

மரங்கள்



யார்மீது கோபமோ
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.
நீண்ட சாலையில்
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.
வளர்ந்துவிட்ட
நகரத்தின் அடையாளமாய்
நடமாடும் மனித இயந்திரங்கள்
காங்கிரீட் கட்டிடங்கள்.
வாகன நெரிசலும், புகையும்...
வெகுநேரமாக சுற்றுகிறேன்
எங்கும் தென்படவில்லை
மரமெனும் மகத்துவம்
மெதுவாக புரிய ஆரம்பித்தது
சூரியனின் கோபம்.

கோடு குமார்

ரூம்ல மல்லாக்க படுத்து விட்டத்த வெறிச்சு பாத்துட்டு இருக்கார் நம்ம CK. நாம நல்லாதான எல்லா கேள்விக்கு yes, No, தெரியும், தெரியாது, No Idea-னு பதில் சொல்றோம், அப்புறம் ஏன் இவனுங்க "i will call you back" ஊட்டுக்கு அனுப்பிடறாங்க அப்படினு திங்க் பண்ணிட்டு இருக்கார்.

ஒரு வாரம் கழிச்சு ஒரு இண்டர்வியூக்கு போயிருக்கார்.

இன்டர். எடுப்பவர்: மிஸ்டர். குமரப்பன்.
CK: அது அப்பா, அம்மா வச்ச பேரு, எனக்கு நானே வச்சுகிட்ட பேர் கோடு குமார்.
இ.எ: கோடு குமார்???
CK:கோடுனா நீ நெனக்கிற line இல்ல மேன், கோடு, code kumar.
இ.எ:ஓஓஓ. அது என்ன code kumar???
CK:நான் படிச்ச கம்யூட்டர் சென்டர்ல நான் தான் நல்லா HTML கோடு எழுதுவேன். அத பாத்துட்டு அங்க இருந்தவங்க வச்ச பேர் தான் இது.
இண்டர்வியூ மேல நடக்குது..
.
.
.
.
இ.எ:நீங்க எதாவது என்கிட்ட கேக்கனும்னு விரும்பறீங்களா?
CK:இல்லை.
இ.எ எழுவதை பார்த்ததும் வேகமா எழுந்து கை குலுக்கிவிட்டு "i will call you back" னு சொல்றார்.
இ.எ: இதல்லாம் நாங்க தான் சொல்லனும்.
CK: ஆமா நீங்க தான் சொல்லனும், ஒரு சேஞ்சா இருக்கட்டுமேனு நான் சொன்னேன்.
இ.எ ஙே முழிக்கிறார்.


எப்படியோ முட்டி மோதி ஒரு கம்பெனில ஜாய்ன் பண்ணி ஒரு வருடம் முடிஞ்சுடுச்சு.
அன்னிக்கு அப்பதான் ஆபிஸ் வந்து சிஸ்டத்த ஆன் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார். புதுசா ஜாய்ன் பண்ணின ஒருத்தர் பக்கத்துல வரார்.

அவ்ரோட டீட்டெய்ஸ் எல்லாம் கேக்கிறார் நம்ம CK.

ஆமா சார் சும்மா ஒக்காந்திருக்கீங்களே வேலை எதுவும் இல்லையா?
அத ஏம்பா கேக்குற?

சாரி சார். நான் எதுவும் கேக்கல.

அட அதுக்கில்ல சொல்றேன் கேளு.

+2 பெயிலாயிட்டதால் டுட்டோரியல் காலேஜ் போய் பாஸ் பண்ணினேன். நாம தான் டுட்டோரியல் காலேஜ் போய்ட்டமே அப்புறம் ஏன் இன்னொருக்கா காலேஜ் போகனும்னு கம்யூட்டர் சென்டர்ல சேந்து html படிச்சேன்.

அங்க கோர்ஸ்ச முடிச்சுட்டு வேல தேட ஆரம்பிச்சேன். நிறைய கம்பெனி அட்டென் பண்ணினேன். இங்க தான் என்னோட திறமைய பாத்துட்டு வேல கொடுத்தாங்க.

அப்படி என்னென்ன கேள்வி கேட்டாங்க.

ஒருத்தன் html பேஜ்ல மொதல்ல என்ன கோட் வரும்னு கேட்டான். html பேஜ் வேற என்ன வரப்போகுது அப்படினு நெனச்சிட்டு html தான் வரும்னு குத்துமதிப்பா சொன்னேன்.

அப்புறம் இன்னொருத்தன் 2 சர்வர் இருக்கு, பழைய சர்வர எடுத்துட்டு புதுச மாத்தனும்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டான்.

அதுல இருக்கிற வயரெல்லாம் கழட்டி இதுல மாட்டினா முடிஞ்சதுனு நானும் சொன்னேன்.

கடைசியா இன்னொருத்தன் வந்து சைட் மெயின்டன் பண்னுவியானு கேட்டான். அதுக்கென்ன 1-க்கு ரெண்டா மெயிண்டன் பன்றேனு சொன்னேன். ஆனா இப்போ தான் தெரியுது அவனுங்க கேட்ட சைட் வேற, நான் சொன்ன சைட் வேறனு.

ஆமாண்ணே இவ்ளோ சொல்றீங்களே, இங்க குறிக்கோள் என்னண்ணேனு கேக்கவும் நம்ம CK கண் கலங்குகிறார்.

அய்யயோ என்னாசுணே.

ஒன்னுமில்லப்பா. இவ்ளோ நாளா என் மனசுல மட்டும் இருந்தத மொத தடவையா உங்கிட்ட சொல்றேன் கேளு.

கம்யூட்டர் சென்டர்ல கோர்ஸ முடிச்சுட்டு வந்து, மை நேம் கோடு குமார், மை பாதர் நேம் ஈஸ்......, அப்படினு கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்னிட்டு போய் இன்டர்வியூ அட்டென் பண்ணினா அவனவன் "i will call you back, "i will call you back" னு சொல்றானே தவிர எவனும் திரும்ப கூப்பிடல. அதனால அன்னிக்கு எடுத்தேன் ஒரு சபதம்.

என்னிக்காவது நான் ஒரு கம்பெனில PM ஆகி இன்டர்வியூ வற்றவனையெல்லாம் "i will call you back", "i will call you back" னு சொல்லனும்னு சொல்லிட்டு வெறியோடு பார்க்கிறார்.

எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார் புதிதாக வந்தவர்.

மூங்கில் நெல்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை. மூங்கில் நெல் அப்படி ஒரு செய்திய தினத்தந்தில படிச்சபிறகு தான் அதை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

நம்ம ஊர் கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குதுனு படிச்சிட்டு அங்க போய் பார்க்காம இருக்கமுடியுமா?. அதிலிருந்து நெல் கிடைக்குதுனு படிக்கவும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. அதான் பொங்கலுக்கு ஊருக்கு போறப்ப கண்டிப்பா போய் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டுதான் போயிருந்தேன்.

கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது. முன்பு சென்றிருந்த போது மலைக்கு மேலே செல்லும் சாலையின் இருபக்கத்திலும் வளர்ந்து நேராக, உயரமாக நின்ற மரங்கள் இப்போது பூத்து வளைந்து நிற்பது மிகவும் அழகாக உள்ளது.

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள். 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். இப்போதுதான் பூத்துள்ளது, இன்னும் ஒரு மாதம் ஆகும் காய்த்து விழுவதற்கு என்றார்கள்.



மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. இது போன்ற மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது.





கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சோதனைசாவடியில் கேட்டபோது, இங்கு மலையில் அடிப்பகுதியில் மட்டும் தான் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன. இங்கு உள்ளவை 1960 க்கு பின் நடப்பட்டவை, இப்போது முற்றி பூத்துள்ளன. இத்தோடு இதன் ஆயுட்காலம் முடிகிறது. காய்த்த பின் இந்த மரங்கள் காய்ந்துவிடும். இவற்றை வெட்டிவிடுவார்கள் என சியாம் சுந்தர் கூறினார்.

பிரிஞ்சவங்க சேர்ந்தா?

PIT - புகைப்பட போட்டிக்கு


பில்லா 2007



பழைய கதை தான் என்றாலும் புதிய விதமாக திரைக்கதையை அமைத்ததில் அசத்தி இருக்கிறார்கள். பழைய பில்லாவில் இருந்த "தேங்காய் சீனிவாசன்" கேரக்டர் மிஸ்சிங் என்றாலும் பெரிய வித்தியாசம் எதும் இல்லை. கதைகளம் முழுவதும் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பிரமாண்டமாய் இருக்கிறது.

அஜீத் பிரமாண்டத்திற்கு கரெக்டாக பொருந்தியிருக்கிறார். நமீதாவை மிஞ்சும் முயற்சியில் நயன் வெற்றி பெறுகிறார். போலிஸாக பிரபு அந்த அளவுக்கு பொருத்தமாக இல்லை என்றே சொல்லலாம். சில இடங்களில் போலிஸா என்பதை மறந்தது போல் வசனங்கள்.





இயக்குனர் விஷ்ணுவர்தன் கலக்கியிருக்கிறார். கேமரா கோணங்களும், படமாக்கப்பட்ட விதமும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். இதைபார்க்கும்போது ஷங்கரின் சில படங்கள் பிரமாண்டம் என்று வந்துள்ளதில் என்ன பிரமாண்டம் என்ற கேள்வியே எஞ்சுகிறது. செலவு செய்ததை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் இயக்குனர்.

படத்தில் ஒரிஜினல் பில்லா சாகும் வரை வசனங்கள் குறைவு, விறுவிறுப்பு அதிகம். அதன்பின் சிறிது விலகி, வேலு, சந்தானம் கலகலக்க வைக்கின்றனர். "அவரு ஆறு தல, நான் ஒரே தல" போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். இவை பில்லா என்ற கெத்தில் இருந்து விலகி எப்போதும் போன்ற சாதாரண படமாகவே காட்டுகின்றன. இவ்வளவு செய்தவர்கள் பாடல்களுக்கு இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.



கடைசி 15 நிமிடத்தில் சிறிது சலிப்பு ஏற்படுகிறது என்றாலும் படத்தின் பிரமாண்டம், அஜீத் நடிப்பு, நயந்தாராஆஆஆ என படம் வெற்றி படம் தான்.








என்ன ஒரே ஒரு குறை நயன்தாராவுக்கு ஒரு சண்டைகாட்சி வைத்திருக்கலாம்.

குட்டீஸ் எப்படியெல்லாம் இருக்காங்க - என்னத்த சொல்ல...

மலர்கள் - PIT போட்டிக்கு







மேலிரண்டும் போட்டிக்கு...


மற்ற படங்கள்...












பொல்லாதவன் - என் பார்வையில்...


தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக(?!) ஓடிக்கொண்டிருக்கும்
"அழகிய தமிழ் மகன்", "கண்ணாமூச்சி ஏனடா" போன்ற மிகச்சிறந்த படங்கள ஓசில பாக்குற வாய்ப்பு கிடைச்சப்ப கூட ஒடம்பு சரியில்லை அப்படிங்கிறத காரணமா வச்சு படம் பாக்க போகாம தப்பிச்சுட்டேன். ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே அப்படினு நெனச்சு சந்தோசபட்டுகிட்டி இருந்தேன்.ஆனா விதி வலியதுங்கிறது கண்பார்ம் ஆயிடுச்சு.

ஏதோ இப்ப கொஞ்சம் காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சு அப்படினு சந்தோசமா இருந்தப்ப நம்ம நண்பன் அதான் இப்போ சரியாயிடுச்சுல்ல வா எதாவது படத்துக்கு போலாம்னான். ஏண்டா "அழகிய தமிழ் மகன்", "கண்ணாமூச்சி ஏனடா" படத்த பாத்துட்டு வந்தும் மறுபடி படத்துக்கு கூப்பிடுறயே உனக்கு ரொம்ப தான் தைரியம்னு சொன்னதுக்கு, சினிமாவுல இதெல்லாம் சாதாரணம்டா அப்படிங்கிறான். ஒரு வழியா மனச தேத்திகிட்டு போலாம்னு முடிவு பண்ணி என்னா படம்னேன். "பொல்லாதவன்" அப்படினான். ஏண்டா என் செலவுல எனக்கே சூன்யம் வைக்க பாக்குறியே அப்படினு டென்சன் ஆயிட்டேன்.

ஏற்கனவே "சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன்" போன்ற சிறப்பான படங்கள பாத்த அனுபவம் இருந்ததால கண்டிப்பா முடியாது தயவு செஞ்சு என்ன விட்ரு அப்படினு அழாதகுறையா கேட்டேன். ஆனா கண்டிப்பா வந்தே ஆகனும்னு சொல்றான். சரி நடப்பது நடக்கட்டும்னு வரேன்னு சொல்லிட்டேன், ஆனாலும் உள்ள ஒரு பயம். சரி நம்ம மக்கள் விமர்சனம் எழுதியிருப்பாங்களே அப்படினு தேடி புடிச்சு படிச்சதுல ஓரளவு நல்லா தான் எழுதியிருந்தாங்க.ஓரளவுக்கு மனசு சமாதானமாச்சு. 6.30 ஷோக்கு 6 மணிக்கு போனா எல்லாம் ஹவுஸ்ஃபுல்னு போட்டிருந்தான். அப்பாடி தப்பிச்சோம்னு ரொம்ப குஷியாயிட்டேன். இந்த ஷோ போனா போகுது அடுத்த ஷோ இருக்குதுல்ல அப்படினு 9.45 ஷோக்கு டிக்கட் வாங்கிட்டு வர்ரான். சரினு விதிய நெனச்சு நொந்துகிட்டே ரூம்க்கு வந்துட்டோம்.

9.30 க்கு தியேட்டருக்கு போனா அப்பவும் ஹவுஸ்ஃபுல்னு போர்ட பாத்ததும் ஒரு வேள படம் நல்லாஇருக்குமோனு லைட்டா ஒரு டவுட் வந்திடுச்சு. உள்ள போய் ஒக்காந்து படம் போட்டாங்க, மொத சீன், ரெண்டு பேர் மாடிபடில வேகமா ஏற்றாங்க, கேமரா ஆட்டத்த பாத்ததும் படம் முழுதும் இப்படிதான் இருக்குமோன்னு மறுபடி மனசுக்குள்ள கலவரமாயிடுச்சு. ஒரு 15 நிமிடம் கொஞ்சம் கடியாத்தான் போச்சு, அதுக்கப்புறம் கொஞ்சம் நார்மலா போக ஆரம்பிச்சது. தறுதலையா சுத்தர பையன், அவனிடம் அப்பா கேள்வி கேட்க இருவர்க்கும் சண்டை. வேலைக்கு போகாமா ஏண்டா வீணா சுத்திகிட்டு இருக்க அப்படினு கேக்க, தன் நண்பர்களின் பெற்றோரை சுட்டி காட்டி அவர்கள் அவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைத்தார்கள், அதனால அவங்க வேலைக்கு போறாங்க நீ எனக்காக என்ன செலவு செஞ்ச? அப்படினு கேட்க. அடுத்த நாளே தன்னால் முடிந்த 70,000 பணத்தை கொடுத்து, என்னால இவ்வளவு தான் முடியும் இத வச்சு என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ என்று கூறிவிடுகிறார். பணம் கையில் வந்ததும் எதையும் யோசிக்காமல் தன் கணவான பல்சர் வண்டி வாங்கி வர, அம்மா பானுபிரியா எதாவது உறுப்படியா செய்டானு பணத்த கொடுத்தா இப்படி வண்டிய வாங்கிட்டு வந்து நிக்குறானேனு பதறுகிறார். வண்டி இல்லைனா யாரும் வேலை தரமாட்டாங்க என்பது தனுஷின் பதில். இரண்டரை வருடமாக பேசாத காதலி(?!) பைக் வாங்கியதும் காலேஜ்ல டிராப் பண்ண சொல்லி கேக்குது.

நம்ம ஹீரோ வேலைக்கு போறார், அந்த பணத்துல காதலிக்கு பரிசு வாங்கிகொடுத்துட்டு, காதலிய டிராப் பண்ண போறார். அங்க வண்டிய தொலச்சுட்டு அத கண்டுபிடிக்க போய் அந்த ஏரியா ரவுடிங்க கூட பிரச்சனை ஆகுது. அவங்க அண்ணன் - தம்பி பிரச்சனையில் தம்பியே அண்ணனை போட்டு தள்ளிட்டு அத தனுஷ்தான் செய்ததா செல்லி மாட்டி விட, தன்னை கொல்ல வர்ரவங்ககிட்ட இருந்து தப்பிக்க இவரே கொலை செய்ய வேண்டியதாயிடுது.

ஹீரோயின் என்ற பெயரில் திவ்யா அவ்வப்போது வந்து போகிறார். ஹீரோயினுக்கு அப்பா, அம்மாவே இல்லையா என்ற குறையை போக்க இரண்டு சீனில் வந்து போகிறார்கள். தமிழ்சினிமாவின் காதல் கெமிஸ்டிரி என்னானு புரியல. நம்ம தொழிலுக்கு குறுக்க வர்ரவன மட்டும் தான் போட்டு தள்ளனும், வீணா பப்ளிக்க டிஸ்ட்ரப் பண்ண கூடாதுங்குற வில்லன் லாஜிக் சூப்பர். பாலாஜி அண்ணனை கொன்று விட அண்ணி கதறி அழும் காட்சியை குறைத்திருக்கலாம். சோகத்திற்கு பதிலாக வெறுப்பே மிஞ்சுகிறது.

ஜி.வி. பிரகாஷ், யோகி-பி இசையில் "எங்கேயும் எபோதும்" ரீமிக்ஸ் பாடல் ஒன்று மட்டும் தான் மனதில் நிற்கிறது.(இடைஇடையே ஆங்கில + புரியாத வார்த்தைகளை சேர்த்து விடுவதுதான் ரீமிக்ஸா???)

வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இராத்திரி சென்னை என ஒளீப்பதிவு நல்லா வந்திருக்கு.

அப்புறம் ஒரு டவுட்டுங்க, ஒரு குருப்பா 2-பீஸ்ல பொண்ணுங்கள ஆடவுட்டுட்டு வில்லன் கைல முடிய முடிய பியர் பாட்டில கொடுத்துட்டா வில்லன் கோபமா இருக்கானு அர்த்தமா?.

படம் முடிஞ்சு போகும் போது நண்பன் சொன்னது, என்னடா படம் எடுக்குறானுங்க, எதுக்கு படம் எடுக்குறாங்கனும் தெரியமாட்டேங்குது, ஆனா மத்த 2 படத்துக்கு இது கொஞ்சம் பரவால அப்படினான்...

டிஸ்கி: ஒரு போஸ்ட் போடறதுக்கு சான்ஸ் கிடைக்குது அப்படினுதான் படத்துக்கே போனேன்.

நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு




ரோமியோ - ஜூலியட்


நேற்றுதான் ரோமியோ ஜூலியட் காதல், புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. படித்து முடித்தவுடன் சிறந்த காதலர்கள், அப்படி, இப்படி என்று ஏன் புகழ்கிறார்கள் என்பதற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை.

ரோமியோ சிறந்த காதலனா?. முதலில் ரோஸலின் என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை. அந்த ஊரில் நடக்கும் ஒரு விருந்துக்கு ரோஸ்லின் வருகிறாள் என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து இவனும் அந்த விருந்துக்கு செல்கிறான். அங்கு ரோஸலினை விட அழகாக ஜூலியட்டைப் பார்க்க, ஜூலியட்டும் ரோமியோவைப் பார்க்க, இருவர்க்கும் பல்பு எறிந்து, ஒளிவட்டம் தோன்றி காதலாக மாறுகிறது. இருவரும் அவரவர்களின் ஜன்ம விரோதிகளின் வாரிசுகளைத்தான் காதலிக்கிறோம் என தெரிந்தும், அவர்களை காதலே வெல்கிறது. குடும்ப சண்டை காரணமாக ஒன்று சேர முடியாது என்று, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடித்து அவரவர் வீட்டிற்கு திரும்பி செல்கிறார்கள். அப்போது ஜூலியட்டின் சகோதரன், ரோமியோவிடம் வீண் சண்டைக்கு அழைக்க, அந்த சண்டையில் ரோமியோவின் உயிர் நண்பன் கொல்லப்படுகிறான். அந்த ஆத்திரத்தில் ரோமியோ ஜூலியட்டின் சகோதரனை கொன்று விடுகிறான். இதனால் நாடு கடத்தப்படுகிறான். இந்நிலையில் ஜூலியட்டிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பெற்றோரிடம் திருமணம் வேண்டாம் என்றும், தனக்கும் ரோமியோவிற்கும் திருமணம் நடந்துவிட்டதும் என்று கூறுகிறாள். ஆனால் அவர்கள் கேட்பதாய் இல்லை. இதனால் திருமணம் செய்து வைத்த பாதிரியாரின் உதவியை நாடி செல்கிறாள்.

பாதிரியாரின் யோசனைப்படி மயக்க மருந்தை சாப்பிட்டு விட்டு இறந்தது போல் இருக்க, இறந்துவிட்டாள் என எண்ணி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கின்றனர். இவை எல்லாம் ஒரு நாடகம், நீ வந்து ஜூலியட்டை அழைத்து செல் என கடிதம் ஒன்றரை ரோமியோவிற்கு அனுப்புகிறார் பாதிரியார். ஆனால் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் அக்கடிதம் போய் சேரவில்லை. ஆனால் ஜூலியட் இறந்துவிட்டாள் என்று செய்தி மட்டும் வேறொருவன் மூலம் வந்து சேருகிறது. உண்மையாகவே இறந்துவிட்டாள் என்று எண்ணி, கல்லறை சென்று அவளின் முகத்தை பார்த்துவிட்டு விஷம் குடித்து இறந்துவிடுகிறான். அப்போது ஜூலியட்டும் மயக்கம் தெளிந்து எழுகிறாள். ரோமியோ இறந்தது கண்டு தானும் வாளை மார்பில் செறுகிக்கொண்டு உயிர்விடுகிறாள்.

அப்போது அங்கு வந்த எல்லொரிடமும் (இருவரின் பெற்றோர் உட்பட), பாதிரியார் நடந்ததை கூறுகின்றார். இரு குடும்பமும் தன் பழைய பகையை மறந்து நண்பர்களாகின்றனர். இவர்களின் காதலை போற்றும் விதமாக ஊரில் நடுவில் இருவர்க்கும் சிலை வைக்கிறார்கள்.


எனக்குள் இருந்த கேள்வி கண்ணாயிரம் விழித்துக்கொண்டு கேட்ட சில கேள்விகள்:

1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்.

2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா?

3. வாழாமல் அற்ப ஆயுளில் முடிவது தான் சிறந்த காதலா?.

எங்க போறீங்க?. பதில் சொல்லிட்டு போங்க...

படியில் பயணம் நொடியில் மரணம்....

"படியில் பயணம் நொடியில் மரணம்" இது நம்ம ஊர் பேருந்துகளில் இருக்கும் வாசகம். இத படிச்சுகிட்டே நம்ம மக்கள் படியிலேயே தான் பயணம் செய்வாங்க.



படியில் தான் நிற்பேன் என்று இருப்பவர்களுக்கு அரசு புது வகையில் பேருந்துகளை இயக்குகிறது.

.
.
.
.
.
.
.
.
.
.
.





இப்போ என்ன பண்ணுவாங்கோ....

இப்போ என்ன பண்ணுவாங்கோ......

நோ ஃபீலிங்ஸ்...







எப்போதும்
விட்டு விலக கூடிய
ஆயத்த நிலையில் தான்
இப்போது இருப்பவர்களும்...

இவர்களைப் பற்றியோ
முன் சென்றவர்கள் பற்றியோ
கவலை ஏதுமில்லை
இதுவரை என்னிடத்தில்...

இருந்த போதிலும்
'அந்த' பெயர் தான்.
யோசிக்க வைக்கிறது
எல்லாவற்றையும் நிறுத்த
முடிவெடுத்தாகி விட்டது.
இதோ செல்கிறேன்...




நாளை முதல்
'நோ' சொட்டை
ஒன்லி மொட்டை...

மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...

குண்டாவது எப்படி???....


குண்டாவது எப்படி???....

நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது நல்லா குண்டா இருந்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் இளைத்து சரியான அளவு இருந்தேன்.

அப்படியே கல்லூரி நாட்களிலும் தொடர்ந்ததால் எந்த கவலையும் இல்லை. ஆனா என்னிக்கு சென்னை வந்து ஓட்டலில் சாப்பிட ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து கொஞ்சம் கொஞ்சமா மெலிய ஆரம்பிச்சுடுச்சு உடம்பு. எனக்கு அப்படியே இருப்பது போல தான் தெரியுது.

ஆனா ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது, ஏண்டா இப்படி ஆயிட்ட என்று கேட்கிறார்கள். இப்படி எல்லாரும் ஊருக்கு போகும்போதும் கேக்கிறதால டென்சன் தான் ஆகுது. இப்படிதான் நேத்து ஊருக்கு போயிருந்த போதும் இப்படி பிரச்சனை ஆரம்பிக்க நான் அடுத்த முறை ஊருக்கு(2 மாதம் கழித்துதான் போவேன்) வரும்போது குண்டாதான் வருவேன் அப்படினு சவால்(?!) விட்டுட்டு வந்துட்டேன்.

ஆனா என்ன பண்றதுனு ஒன்னும் புரியல. ஊரில் இருந்து வந்ததிலிருந்து ஆபிஸ்ல எல்லோரிடமும் கேட்டால் ஆளுக்கு ஒரு ஐடியா கொடுக்குறாங்க. கடைசில ஒருத்தன் வந்து ஏண்டா, பிளாக்ல மேட்டரே இல்லாம பதிவு போடுறீங்களே, அதுக்கு பதிலா இது போல உருப்படியான(?!) பதிவு ஏன் போடகூடாது கேட்டான்.

அப்புறம் தான் நம்ம பதிவுலகில பல ஜாம்பவான்கள் முதல் ஒல்லிபிச்சாண்டிகள் வரை எல்லா வகையிலும் இருக்கிறார்களே கேட்டால் ஐடியா கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை கேட்கிறேன்.


"குண்டாவது எப்படி???"

நான் கேள்விபட்ட சில வழிகள்:-

1. தினமும் மூன்று வேளையும் நல்லா சாப்பிடனும். சாப்பிட்ட உடனே தூங்கிடனும். இப்படி தினமும் செஞ்சா ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்குமாம்.

2. கவலைகளை மறந்து இருக்கனுமாம். கவலை இருந்தாவே உடல் நலமாக இருக்காதாம்.

3. "குடிமகன்" ஒருத்தர் கொடுத்த ஐடியா, வாரம் ஒரு பீர் சாப்பிட நல்லா குண்டாயிடலாம் என்றார். அதற்கு அடிமையாயிட்டா என்ன பண்ணனு கேட்டதுக்கு, அதுக்கு தனியா ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம்கிறார்.

4. பாலும் தேனும் கலந்து குடிச்சா நல்ல பலன் இருக்கும்னு சொல்றாங்க.

டிஸ்கி: மக்கா, இதுல குண்டாவதற்கும் ஐடியா கொடுங்க, அப்படியே குண்டாயிட்டா ஒல்லியாவதற்கும் ஐடியா கொடுங்க....

ஏன்னா, நீங்க கொடுக்குற ஐடியாவுல ஓவரா குண்டாயிட்டா, ஒல்லி ஆவுரது எப்படினு தெரியனுமில்ல அதுக்கு தான் இந்த முன்னெச்சரிக்கை....