
தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக(?!) ஓடிக்கொண்டிருக்கும்
"அழகிய தமிழ் மகன்", "கண்ணாமூச்சி ஏனடா" போன்ற மிகச்சிறந்த படங்கள ஓசில பாக்குற வாய்ப்பு கிடைச்சப்ப கூட ஒடம்பு சரியில்லை அப்படிங்கிறத காரணமா வச்சு படம் பாக்க போகாம தப்பிச்சுட்டேன். ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே அப்படினு நெனச்சு சந்தோசபட்டுகிட்டி இருந்தேன்.ஆனா விதி வலியதுங்கிறது கண்பார்ம் ஆயிடுச்சு.
ஏதோ இப்ப கொஞ்சம் காய்ச்சல் எல்லாம் சரியாயிடுச்சு அப்படினு சந்தோசமா இருந்தப்ப நம்ம நண்பன் அதான் இப்போ சரியாயிடுச்சுல்ல வா எதாவது படத்துக்கு போலாம்னான். ஏண்டா "அழகிய தமிழ் மகன்", "கண்ணாமூச்சி ஏனடா" படத்த பாத்துட்டு வந்தும் மறுபடி படத்துக்கு கூப்பிடுறயே உனக்கு ரொம்ப தான் தைரியம்னு சொன்னதுக்கு, சினிமாவுல இதெல்லாம் சாதாரணம்டா அப்படிங்கிறான். ஒரு வழியா மனச தேத்திகிட்டு போலாம்னு முடிவு பண்ணி என்னா படம்னேன். "பொல்லாதவன்" அப்படினான். ஏண்டா என் செலவுல எனக்கே சூன்யம் வைக்க பாக்குறியே அப்படினு டென்சன் ஆயிட்டேன்.
ஏற்கனவே "சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன்" போன்ற சிறப்பான படங்கள பாத்த அனுபவம் இருந்ததால கண்டிப்பா முடியாது தயவு செஞ்சு என்ன விட்ரு அப்படினு அழாதகுறையா கேட்டேன். ஆனா கண்டிப்பா வந்தே ஆகனும்னு சொல்றான். சரி நடப்பது நடக்கட்டும்னு வரேன்னு சொல்லிட்டேன், ஆனாலும் உள்ள ஒரு பயம். சரி நம்ம மக்கள் விமர்சனம் எழுதியிருப்பாங்களே அப்படினு தேடி புடிச்சு படிச்சதுல ஓரளவு நல்லா தான் எழுதியிருந்தாங்க.ஓரளவுக்கு மனசு சமாதானமாச்சு. 6.30 ஷோக்கு 6 மணிக்கு போனா எல்லாம் ஹவுஸ்ஃபுல்னு போட்டிருந்தான். அப்பாடி தப்பிச்சோம்னு ரொம்ப குஷியாயிட்டேன். இந்த ஷோ போனா போகுது அடுத்த ஷோ இருக்குதுல்ல அப்படினு 9.45 ஷோக்கு டிக்கட் வாங்கிட்டு வர்ரான். சரினு விதிய நெனச்சு நொந்துகிட்டே ரூம்க்கு வந்துட்டோம்.
9.30 க்கு தியேட்டருக்கு போனா அப்பவும் ஹவுஸ்ஃபுல்னு போர்ட பாத்ததும் ஒரு வேள படம் நல்லாஇருக்குமோனு லைட்டா ஒரு டவுட் வந்திடுச்சு. உள்ள போய் ஒக்காந்து படம் போட்டாங்க, மொத சீன், ரெண்டு பேர் மாடிபடில வேகமா ஏற்றாங்க, கேமரா ஆட்டத்த பாத்ததும் படம் முழுதும் இப்படிதான் இருக்குமோன்னு மறுபடி மனசுக்குள்ள கலவரமாயிடுச்சு. ஒரு 15 நிமிடம் கொஞ்சம் கடியாத்தான் போச்சு, அதுக்கப்புறம் கொஞ்சம் நார்மலா போக ஆரம்பிச்சது. தறுதலையா சுத்தர பையன், அவனிடம் அப்பா கேள்வி கேட்க இருவர்க்கும் சண்டை. வேலைக்கு போகாமா ஏண்டா வீணா சுத்திகிட்டு இருக்க அப்படினு கேக்க, தன் நண்பர்களின் பெற்றோரை சுட்டி காட்டி அவர்கள் அவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைத்தார்கள், அதனால அவங்க வேலைக்கு போறாங்க நீ எனக்காக என்ன செலவு செஞ்ச? அப்படினு கேட்க. அடுத்த நாளே தன்னால் முடிந்த 70,000 பணத்தை கொடுத்து, என்னால இவ்வளவு தான் முடியும் இத வச்சு என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ என்று கூறிவிடுகிறார். பணம் கையில் வந்ததும் எதையும் யோசிக்காமல் தன் கணவான பல்சர் வண்டி வாங்கி வர, அம்மா பானுபிரியா எதாவது உறுப்படியா செய்டானு பணத்த கொடுத்தா இப்படி வண்டிய வாங்கிட்டு வந்து நிக்குறானேனு பதறுகிறார். வண்டி இல்லைனா யாரும் வேலை தரமாட்டாங்க என்பது தனுஷின் பதில். இரண்டரை வருடமாக பேசாத காதலி(?!) பைக் வாங்கியதும் காலேஜ்ல டிராப் பண்ண சொல்லி கேக்குது.
நம்ம ஹீரோ வேலைக்கு போறார், அந்த பணத்துல காதலிக்கு பரிசு வாங்கிகொடுத்துட்டு, காதலிய டிராப் பண்ண போறார். அங்க வண்டிய தொலச்சுட்டு அத கண்டுபிடிக்க போய் அந்த ஏரியா ரவுடிங்க கூட பிரச்சனை ஆகுது. அவங்க அண்ணன் - தம்பி பிரச்சனையில் தம்பியே அண்ணனை போட்டு தள்ளிட்டு அத தனுஷ்தான் செய்ததா செல்லி மாட்டி விட, தன்னை கொல்ல வர்ரவங்ககிட்ட இருந்து தப்பிக்க இவரே கொலை செய்ய வேண்டியதாயிடுது.
ஹீரோயின் என்ற பெயரில் திவ்யா அவ்வப்போது வந்து போகிறார். ஹீரோயினுக்கு அப்பா, அம்மாவே இல்லையா என்ற குறையை போக்க இரண்டு சீனில் வந்து போகிறார்கள். தமிழ்சினிமாவின் காதல் கெமிஸ்டிரி என்னானு புரியல. நம்ம தொழிலுக்கு குறுக்க வர்ரவன மட்டும் தான் போட்டு தள்ளனும், வீணா பப்ளிக்க டிஸ்ட்ரப் பண்ண கூடாதுங்குற வில்லன் லாஜிக் சூப்பர். பாலாஜி அண்ணனை கொன்று விட அண்ணி கதறி அழும் காட்சியை குறைத்திருக்கலாம். சோகத்திற்கு பதிலாக வெறுப்பே மிஞ்சுகிறது.
ஜி.வி. பிரகாஷ், யோகி-பி இசையில் "எங்கேயும் எபோதும்" ரீமிக்ஸ் பாடல் ஒன்று மட்டும் தான் மனதில் நிற்கிறது.(இடைஇடையே ஆங்கில + புரியாத வார்த்தைகளை சேர்த்து விடுவதுதான் ரீமிக்ஸா???)
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இராத்திரி சென்னை என ஒளீப்பதிவு நல்லா வந்திருக்கு.
அப்புறம் ஒரு டவுட்டுங்க, ஒரு குருப்பா 2-பீஸ்ல பொண்ணுங்கள ஆடவுட்டுட்டு வில்லன் கைல முடிய முடிய பியர் பாட்டில கொடுத்துட்டா வில்லன் கோபமா இருக்கானு அர்த்தமா?.
படம் முடிஞ்சு போகும் போது நண்பன் சொன்னது, என்னடா படம் எடுக்குறானுங்க, எதுக்கு படம் எடுக்குறாங்கனும் தெரியமாட்டேங்குது, ஆனா மத்த 2 படத்துக்கு இது கொஞ்சம் பரவால அப்படினான்...
டிஸ்கி: ஒரு போஸ்ட் போடறதுக்கு சான்ஸ் கிடைக்குது அப்படினுதான் படத்துக்கே போனேன்.