100-வது நாள் கொண்டாட்டம்

நண்பர்களுக்கு வணக்கம்,

எல்லாரும் பிளாக் எழுதுறாங்க அப்படினு நானும் ஒரு வேகத்துல பிளாக் ஆரம்பிச்சு, வணக்கம்னு ஒரு பதிவும், ஒரு கவிதை பதிவும் போட்டாச்சு. அப்புறம் யோசிச்சா என்ன எழுதறதுனு ஒன்னுமே புரியல. சரி நம்ம அண்ணாத்த்கிட்டயே ஐடியா கேட்டுறுவோம்னு சிபி அண்ணாத்தைக்கு போன் போட்டேன்.


அண்ணன் தான் ஐடியா குடுத்த்தாரு. இப்படிதான் ஒன்னுமே புரியாது, அதையும் ஒரு மொக்க பதிவா போட்டிரு, அவ்வளவுதான். இப்படிதான் பிளாக் எழுதனும்னு, ரொம்ப உறுதுணையா நின்னு, முன்னேற உதவி செஞ்சிருக்காரு. அப்படி பட்ட நம்ம அண்ணனுக்கு இந்த 100-வது நாளில் நன்றி சொல்ல நானும், என் பிளாக்கும் கடமைப்பட்டுள்ளோம்.


அப்புறம் நான் எழுதுனதையும் மதிச்சு, படிச்சு கமெண்ட் போட்ட உங்களுக்கு பெரிய டாங்ஸ். உங்களோட இந்த சப்போர்ட் இருந்தா பின்னாளில் ஒரு வைரமுத்து மாதிரியோ, வாலி மாதிரியோ இல்லாம ஒரு புதுமாதிரியான கவிஞனை எதிர்பார்க்கலாம்.


100 நாள் ஆயாச்சு. ஏதாவது பண்ணனுமே அப்படினு பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சேன். இப்போதைக்கு அதிகம் பேசப்படறது கவிதை, அதுவும் "கொலைவெறிக் கவிதை"னு ஒரு புது வடிவம் வந்திருக்கு. அதில் ஏதாவது பண்ணலாமேனு முடிவெடுத்தேன். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. கொலைவெறி கவிதை எழுத ஒரு கருவி பண்ணினா என்ன?. அதன் பயனாக ஏதோ என்னால் ஆன ஒரு கருவியை இப்போதைக்கு உருவாக்கியுள்ளேன். அது கொடுத்த

சாம்பிள் கவிதை:

எரிச்சலுற்று
உமக்கேது சில்லுகள்
தொடங்குகின்றன வார்
கெக்கெபிக்கே நானும் பாப்பாக்கள்
புகை நெருங்குகின்றனர்
தெக்கியாரைக் வண்டி பார்க்கிறேன்
கடிக்கட்டும் செருப்பு
கொலைவெறி

மூட்டிவிட்டு
தொலைவில் என் கவனத்தைச்
நிழல்களை
வலித்து புகை
கால்வைத்தும்
காமமுமாய் செய்து
மிதித்துப்போட செல்கிறது
சிதறடிக்க வாசல்
எதிர்ப்படுக்கை
வெப்பம் வெப்பம் உரசியபடிச்
தெக்கியாரைக் என்று
பீடியை
கொலைவெறி வாசலுக்கு
பூனனயின் காலாற
பொருக்கியபடியே

என்னை
கால சூழ்ந்து ஒன்றிலிருந்து
சன்னல் எச்சமாய்
உரசல்
வெப்பம் மூட்டிவிட்டு
என்னை
சுழலத் அழைக்கிறேன்
கண்களுக்குள் கொலைவெறி
உரசியபடிச் கத்தியுடன்
மனிதம் எங்கிருக்கிறது
கருப்புப் விளிம்புகளில் பயணம்
எல்லாம் கும்மியை நோக்கியே
!

அந்த அழகிய நினைவுகள்

எங்கே மறப்பது
உன்னையும்
உன் நினைவுகளையும்...

ஞாபக முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன...

பச்சரிசி பல்வரிசையில்
பளீர் புன்னகை தானே
முதலில் வரவேற்கும்...

சிக்கல் இல்லாத
உன் நீண்ட கூந்தலில்
சிக்கிகொண்டது நானல்லவா?...

அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...

கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...

இப்படியாய்
காதல் என்று சொல்லமுடியாத
அந்த அழகிய நினைவுகள்
வந்து கொண்டேயிருக்கின்றன
என்னுள்....

துளித்துளியாய்...

பார்க்காதே!
அவ்வாறு
என்னைப் பார்க்காதே!
நீயோ
உன் பார்வையால்
முழுவதுமாய் என்னை
அள்ளிச் செல்ல
நானோ
சிதறுண்டு போகிறேன்
துளித்துளியாய்....

தெருவோரப் பூக்கள்

யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...

எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...

எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...

பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...

என்ன இது?...

உன்னை
என்னவென்று சொல்வது?...
நான் அழும்போது
என்னோடு அழுதவள்...
சிரித்தபோது
சேர்ந்து சிரித்த்வள் நீ.
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இருந்தவள்.
இன்றோ
எங்கிருக்கிறாயோ?
எப்படி இருக்கிறாயோ?
எல்லாம் முடிந்துவிட்டது.
இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று...

யார் தான் கேட்பது?...

இப்போது அரசு சட்டம் கொண்டுள்ளது, கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்று...

அச்சட்டத்தின் படி,

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமாம்.

கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டுமாம். சீட் பெல்ட் இல்லாத கார்களில் பொருத்த வேண்டுமாம்.

ஆட்டோ ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

இதெல்லாம் சரிதான்.

சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் டர்பன் அணிந்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாமா என்று அரசிடம் விளக்கம் கேட்கிறார்கள்.

அதுவும் சரிதான்.

ஆனால் 40+25=65+2 என்று போட்டுள்ள பேருந்தில் 100க்கு அதிகமான பேர் பயணிக்கலாமா?

அப்போது அவர்களுடைய பாதுகாப்பு என்னாவது?

இதை மட்டும் ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை...

நல்ல ஹெல்மெட் - கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய தினசரிகளில் வந்த செய்தி - தலை கவசத்தை கட்டாயமாக்க ஆலோசனை!

இந்த பதிவு ஜெ.சந்திரசேகரன் அவர்கள் முன்பே இட்டுள்ளார். ஆனால் இன்னும் 10 நாட்களில் கட்டாய தலைகவசம் என்பதால் இது உதவும் என்ற எண்ணத்தில் இங்கேயும் இடுகிறேன்.


சென்னை வலை பதிவர் சந்திப்பின் போது, சில நண்பர்கள் கேட்ட கேள்வி - நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி? என்பதே!

அவர்களுக்குக் கூறிய தகவல்கள், மற்றவருக்கும் உபயோகமாய் இருக்க இப்பதிவு.

மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போனவர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!

அது - கந்தர் சஷ்டி கவசம்!

நன்றி : ஜெ.சந்திரசேகரன்


சென்னை வலைபதிவர் மாபெரும் மாநாட்டின் தகவல்கள்

சென்ற சனிக்கிழமை மாலை நாமக்கல் சிபி, தேவ், கப்பியார், J K ஆகியோர் பங்கு கொண்ட மாபெரும் வலைபதிவர் மாநாடு சென்னை பெசன்ட் நகர், கடற்கரையில் நடந்தது. சனிக்கிழமை மதியம் அலுவலகம் முடிந்ததும் கிளம்பி திருமங்கலம் சென்று, அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் சிபி அலுவலகம் போய் சேர்ந்தேன். நேரில் பார்த்த்தும் இருவர்க்கும் அப்படியொரு மகிழ்ச்சி. (இருக்காதா பின்ன, ஒரே ஊர்காரங்கல்ல). அலுவலக பதிவேட்டில் கையொப்பம் வாங்கிகொண்டு அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

பின் தேநீர் அருந்தும் போது அவர் ஆரம்பித்த அலைபேசி உரையாடல்(யாருடனோ?...) நான் தேநீர் அருந்திவிட்டு தினத்தந்தி நாளிதழையும் முழுமையாக படித்த பின்பும் நீண்ண்ண்டுகொண்டேயிருந்தது. பின் எனக்கு ஒரு ஐந்து நட்சத்திர மிட்டாய் கொடுத்தார். (அதாங்க 5 star சாக்லெட்).

பிறகு இருவரும் நண்பருடைய வண்டியில் கிளம்பி, சாலையில் இடது ஓஓஓரமாகவே பெசன்ட் நகர் வந்தோம். சர்ச்சுக்கு அருகில் ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு நின்றபோது, கப்பி எதிர்பக்கம் நின்று கொண்டு அலைபேசியில் அழைத்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது தேவ் இருந்து எங்கிருக்கிறீர்கள் என்று அழைப்பு. அவரும் நின்றது எங்களுக்கு எதிர்புறம் தான். பின் நால்வரும் ஒரு சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு தார்சாலையை ஒட்டியுள்ள சுவர்மீது அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

எங்க பேச்சு, வ. வ. ச., மொக்க மற்றும் கும்மி பதிவு, தேவ்வின் கல்லூரி கலாட்டா என்று சுவாரஸ்யமாக சென்றது. அவ்வப்போது தேவ்க்கு திரைப்படத்திற்கு செல்லலாம் என்று நண்பரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது. நாங்கள் இங்கிருக்கும் போது விழியன் அவர்கள் மெரினாவில் இருந்து அலைபேசியில் பேசினார். இந்த மாநாடு அப்படியே 8 மணி வரை தொடர்ந்த்து.

பின் எழுந்து வண்டி இருந்த இடத்திற்கு வந்து கைகுலுக்கிவிட்டு தேவ் கிளம்பிவிட்டார். பின் நாமக்கல் சிபி தனது காதல் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்படியே 8.40 வரை நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பின் நாங்களும் கைகுலுக்கிவிட்டு கிளம்பினோம். 9.15 க்கு என் அறைக்கு வந்துவிட்டு உடல் சூடாக உள்ளது என்று தனிக்க அக்கா மாலா அருந்த சென்றோம். அங்கு அண்ணன் கசிய விட்ட செய்தி அன்று அவருக்கு பிறந்த நாளாம். அப்போதுதான் புரிந்தது எனக்கு மதியம் ஏன் ஐந்து நட்சத்திர மிட்டாய் வழங்கினார் என்று. 11.30 க்கு அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றோம்.

சில சுவாரஸ்யமான சில தகவல்கள்:

1. கப்பியாரிடம் கோவி கண்ணன் சொந்த வேலையாக சென்னை வந்திருப்பதாகவும், நேரில் சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பு ஏற்படாயிற்று.

2. முதலில் கோவி கண்ணன் என்று சொல்லிக்கொண்ட நாமக்கல் சிபி, நான் அவருடைய நண்பர், நாகப்பட்டினம் என்றும் அறிமுகம் செய்து கொண்டது. கடைசியில் தான் உன்மையை கூறினோம். இது தேவ்க்கு முன்பே தெரியும்.

3. நாங்கள் பேசிகொண்டிருந்தபோது எதிரில் வந்து பார்க் செய்யப்பட்ட டிராவல்ஸ் "இண்டிகோ" காரின் உள்ளே நடந்த சென்சார் விசயங்கள்.

4. நாங்கள் சென்ற வண்டியில் "சைடு லாக்" வேலை செய்ய வில்லை. திரும்ப வந்து வண்டியை பார்க்கும் வரை, வண்டி இருக்குமோ இருக்காதோ என்ற பயத்திலேயேதான் இருந்தேன்.

5. "கைகுலுக்கிவிட்டு" என்று போட்டுள்ளது ஏன் என்றால் முக்கியமான சந்திப்புகளின் இறுதியில் கைகுலுக்க வேண்டும் என்று தேவ் கூறினார்.

இப்படி எங்களது சென்னை மாபெரும் வலைபதிவர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

பேருந்தில் நான் ஜன்னலோரம்...

ஜன்னலோர இருக்கைபேருந்தில் நான் ஜன்னலோரம்...
தழுவிச்செல்லும் தென்றல்...
முன் இருக்கையில்
குழந்தையின் சிரிப்பு...
பின் இருக்கையில்
சுவாரஸ்யமான உரையாடல்...
ரசிக்க முடியவில்லை.
மனதில் உறுத்தலாய்
நடத்துனர் கொடுக்காத
ஐம்பது பைசா சில்லரை...





பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறேன்.

ஐந்து...
பத்து...
இருபது நிமிடங்கள்

வந்த பேருந்தில்
முந்தி ஏறியதில்
ஜன்னலோர இருக்கை!
அருகில் தடியாய் ஒருவன்...

அவன் இடிக்க
நான் இடிக்க
பனிப்போரில்
எங்கள் பயணம்.

இறங்க வேண்டிய இடம்.
திரும்பிப் பார்த்துவிட்டு
இறங்கிப் போகிறேன்.

ஜன்னலோரத்தில் அமர்ந்தும்
புழுக்கமாய் மனதில்...

தோழி

நீ

எங்கிருந்தோ வருகிறாய்.

பார்த்த வழியிலேயே

உன்மேல்பாசம்கொண்டு

வருகிறேன்உன்னோடு...

வாழ்க்கையின் திருப்பத்தில்

இடறி விழுகிறேன்.

எழுந்து பார்க்கிறேன்

உன் மனதிலிருந்து...



என்

வாழ்க்கையில்

எங்கெங்கும் நீ வேண்டும்.

பயணத்தில் சக பயணியாய்

பாதையில் எதிர் வருபவராக

தோள் கொடுக்கும் தோழனாக

கொண்டாடிய தருணங்களாக

பகிர்ந்துகொண்ட சோகமாக

வாழ்வின் பரிபூரணமாய்

எங்கெங்கும்

உனைத் தேடுகிறேன்.

வேறெதுவும் இல்லாது

பிரியமான தோழியாய் மட்டுமே!...

எனக்கு பிடித்தது

என் கவிதைக்கு
எத்தனையோ
கருத்துக்கள்
விமர்சனங்கள்
மாற்றங்கள்
எல்லாம் ஏற்றுக்கொண்டு
மிகச் சிறந்ததாய்
மாற்றமும் பெறுகிறது
என் கவிதை...
ஆயினும்
எனக்கு பிடித்து
எனது பிழையான கவிதையே!...

விமர்சனம்

அடிப் பெண்ணே!
நாம் பேசி
பழகி
பரிமாறிய
வார்த்தைகளை விட
நம்மை
விமர்சித்த வார்த்தைகள்
அதிகமாகிவிட்டனவே!...

என்னில் நான் - வியர்டு

இப்பதாங்க பிளாக்ல எழுத ஆரம்பித்திருக்கேன். ஏதோ முன்னமே கவிதை அப்படினு எழுதி வச்சிருகிறதெல்லாம் போட்டு ஒப்பேத்தலாம் அப்படினு நெனச்சேன். ஆனா நம்ம ஊர்காரர் சிபி அண்ணன், பாசமா(?) நம்மல கூப்பிட்டுட்டார். சரி நம்மலும் எழுதலாம் அப்படினு முடிவு பண்ணிட்டு வியர்டுக்கு டிக்ஸ்னரில தேடினா unusual, strange அப்படினு இருந்தது. நானும் எனக்குள்ளே என்னைத்தேடி தேடிப்பார்த்தேன். அப்படி கண்டுபுடிச்ச சில...

ஆர்வக்கோளாறு:
எல்லோருக்குமே கிட்டத்தட்ட ஆர்வக்கோளாறு இருக்கும். இது சமயத்துல அதிகமாகி பின் தான் பிரச்சனை ஆயிடுது. பிரண்ட்ஸ் கூட பேசிக்கொண்டிருக்கும் போது அத செய்யலாம், இத செய்யலாம் அப்படினு முடிவு பண்ணிட்டு, கடைசி வரைக்கும் எதையுமே செய்வதில்லை. அதே மாதிரி எம்.சி.ஏ கூட போய் IGNOU-ல ஜாய்ன் பண்ணி 3 வருடம் ஆகிவிட்டது, ஆனா நம்ம டிகிரி மட்டும் இன்னும் முதல் செமஸ்டர்லேயே இருக்குது. இப்ப ஆபிஸ்லேயும் அத செய்யலாம், இத செய்யலாம்னு சொல்லி, அப்புறம் டைம் இல்ல ஹி.. ஹி..ஹி..-னு ஜகா வாங்க வேண்டியது.

படிப்பு:
நமக்கு படிப்பு ஆர்வம் கொஞ்சம் அதிகம்ங்க, இருங்க இருங்க நான் சொல்றது கதை படிக்கிறது. இது 10-வது முடிச்சு லீவு விடுவாங்கல்ல அப்ப ஆரம்பிச்சது இது. வீட்ல இருந்த ராணிமுத்து, மாலைமதி, கண்மணி அப்படினு ஆரம்பிச்சது. ஒரு நாள் தோட்டத்துல மாடு மேய்ச்ச போது கதைல இண்ரஸ்ட் ஆகி, மாட்ட கவனிக்கவேயில்ல, அது போய் அங்கிருந்த பயிரையெல்லாம் மேஞ்சு அதுக்கு டோஸ் வாங்கியது தனிக்கதை. இந்த ஆர்வம், இப்ப மன்னர்காலத்து வரலாறு பக்கம் போய்கிட்டு இருக்கு...

கோபம்:
என்னோட பெரிய பிரச்சனையே இந்த கோபம் தான். நான் நினைச்சது நடக்காம, கேட்டது கிடைக்காம இப்படி தொடங்கி, நெறைய இடங்கல்ல கோபம் வந்து நம்ம பேர ரிப்பேர் ஆக்கிடுது. நானும் கோபத்த குறைச்சிடனும் அப்படினு முயற்ச்சி செஞ்சு சில சமயங்கள்ல கண்ட்ரோல் பண்ணுவேன், ஆனாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆனா இத கண்டிப்பா கண்ரோல் பன்னனும்.(கோபம் வந்துட்டா அப்படியே அவன் மொகத்துல ஒரு குத்து விடனும் போல இருக்கு)

தனிமை:
ரசிக்கத் தெரிந்தவனுக்கு தனிமை ஒரு வரம். ஆமாங்க கூட்டத்துல கோயிந்தா போட்டு கும்மாளம் அடிப்பதை விட எனக்கு தனிமையில் இருப்பது தான் பிடிக்கும்.தனிமையில இருக்க பழகிட்டா எங்க வேணாலும் இருந்திடலாம் அப்படினு எங்கோ படித்த ஞாபகம். அப்பு தனியா அப்படி என்னத்தான் பண்ணுவீங்க அப்படினு கேக்கறீங்களா?. நாமதான் எப்பவுமே மூலைக்கு ஒன்னா போட்டு வச்சிருப்போமே அந்த புத்தகத்தையெல்லாம் அடுக்கி வைப்பேன், ரூமை சுத்தம் செய்வது, கவிதைனு எதையாவது கிறுக்காது, புத்தகம் எதாவது எடுத்து படிப்பதுனு எதாவது பண்ணிகொண்டு இருப்பேன். ஆனா டீ.வீ பார்க்க, தூங்க அப்படினு போய்ட மாட்டேன். எனக்கென்னவோ இது ரொம்ப பிடிச்சிருக்கு.

ஞாபகசக்தி:
எனக்கே நல்லா தெரியுது, நமக்கு ஞாபக சக்தி அதிகம்னு. ஆனா என்ன பண்ண, இது நல்ல விசயத்துல இல்லையே. முதல் நாள் பிரிப்பேர் பண்ணிய கேள்வியே இண்டர்வியூல கேட்டாகூட, பிரிப்பேர் பண்ணினோம் அப்படினுதான் ஞாபகம் இருக்கே தவிர அதற்கு பதில் என்ன அப்படினு ஞாபகம் வருவதில்லை. ஆனா 10-வதுல வாத்தியார் அடிச்சது இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு. நமக்கு யாராவது கெடுதல் பண்ணினாகூட பாரவாயில்ல, நாம கேட்டது ஒரு முறை செய்யலைனாவே மறுமுறை அவங்கள எங்க பாத்தாலும், அவங்க மறுத்துதான் தான் ஞாபகத்துக்கு முதல்ல வருது... எப்படி நம்ம ஞாபக சக்தி.

அண்ணன் சிபி, வியர்டு எழுதுனு ஆசையா கூப்பிட்டாரு, சரி எழுதலாம்னா என்ன எழுதறதுனே தெரியல. சரி அப்படினு சில பிளாக்ல பாத்தேன், அப்புறம் "வியர்டு"க்கு என்ன அர்த்தம்னு டிக்ஸ்னரில பாத்துட்டு, என்ன எழுதறதுனு தெரியல. எப்படியோ கடைசில எழுதியும் போட்டுட்டேன். என் வேலை முடிஞ்சது. இனி படிச்சு கமெண்ட் கொடுக்கறது உங்க வேலைதான்.

நானும் 2 பேரை கூப்பிடுறேன்.
1. சிந்தனைக்கு... வந்தவை - பாலா
2. வித்தியாசமானவன் - கமல்

எழுத நினைத்தது

ஏனோ மனதில் குழப்பம்.
எழுத வேண்டும் என நினைத்தேன்.
என்ன எழுதுவது
எப்படி எழுதுவது
எதுவும் தெரியவில்லை.
எழுதினேன்..
எழுதியும் முடித்துவிட்டேன்.
கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை"....

கவிதை

உன்னைப் பற்றி
ஏதேதோ நினைவு என்னுள்...
எங்கெங்கோ தேடி
ஏதேதோ வார்த்தைகளைக் கோர்த்து
கவிதை ஒன்று எழுதினேன்.
எழுதி முடித்ததும்
மீண்டும்
மனதில் அதே சுமை...
பின் தான் நினைத்தேன்
கவிதைக்கே
கவிதை எழுத முடியுமா என்று?...

நாம் நண்பர்களே!

உன்னை
சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும்
எனக்கு குழப்பமே.
நம்
உறவுக்குப் பெயர்
நட்பா? காதலா? என்று...
நீ
இல்லாத தருணத்தில்
உன் பெற்றோரின்
விசாரிப்புகளும்
தங்கையின்
புன் சிரிப்பும்
தம்பியின்
உரையாடலும்
உறுதிப்படுத்துகின்றன
நாம்
நண்பர்கள் என்று...

இந்தியா

இந்தியா,
ஜனநாயக நாடு
மக்கள் சொல்வதுதான்
எதுவுமே நடப்பதில்லை...
இருந்தாலும்
இந்தியா ஜனநாயக நாடு.

வேற்றுமை காணாத நாடு
போராடித்தான் பெறவேண்டும்
இட ஒதுக்கீடு
இருந்தபோதிலும்
இந்தியா வேற்றுமை காணாத நாடு

ஒற்றுமையான நாடு
அண்டை மாநிலத்துக்கே
தண்ணீர்தர மாட்டார்கள்
இருந்தாலும்
இந்தியா ஒற்றுமையான நாடு

பண்பாடு நிறைந்த நாடு
திருமணத்திற்கு முன்பே
உடலுறவு கொள்வோர் பலர்
இருந்தாலும்
இந்தியா பண்பாடு நிறைந்த நாடு

சாதி, மத பேதம் பார்க்காத நாடு
அரசியல் செய்ய மட்டும்
எல்லா ஜாதியும் வேண்டும்
இருந்தபோதிலும்
இந்தியா சாதி, மத பேதம் பார்க்காத நாடு

எல்லா நாடுகளிலும்
இந்தியாவை பார்த்து
கற்றுக்கொள்கிறார்களாம்.
என்ன கற்றுக்கொள்கிறார்கள்
இப்படி இருக்க வேண்டும் என்றா?
இப்படி இருக்க கூடாது என்றா?
அது தான் தெரியவில்லை....

உண்மை

நமக்கானவை
மறைக்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...
இதில்,
எனக்கானவை
கிடைக்கப்பெற்றால் கூட
ஊமையாகிப்போகிறேன்
உண்மைகளுடன் சேர்ந்து
நானும்...

என்னைப் பற்றி

வாழ்க்கையை முழுமையாக வாழத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன் நான். பிறந்தது வளர்ந்தது எல்லாம் நாமக்கல். இதுவரை எதுவும் சாதிக்கவில்லை, இனிமேலாவது ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைக்கிறேன் ஆனால் என்ன சாதிப்பது என இதுவரை ஒன்றுமே புரியவில்லை.

பள்ளி தொடங்கி கல்லூரி வரை எல்லாமே ஊரிலேயே முடித்துவிட்டு, ஒன்னரை வருடம் சுற்றிவிட்டு பின் தான் வேலை தேடலாம் என மொத முறையா வெளியூருக்கு கெளம்புறேன். பி.எஸ்.சி கம்பியூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டோம் வேல கண்டிப்பா கிடைக்கும் அப்படினு இங்க வந்து பாத்தா, எனக்கு முன்னாடியே எம்.சி.ஏ முடிச்சுட்டு ஏகபட்ட பேர் வேல தேடறேன் அப்படினு தேடிகிட்டு இருந்தாங்க. சரி ஆனது ஆகட்டும் அப்படினு நானும் இண்டர்வியூக்கு போக ஆரம்பிச்சேன். 4,5 கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போனேன், அங்க வெளிய போடா அப்படினு சொல்லாம "Call Back You" அப்படினு டீசண்டா வெளிய அனுப்பிட்டாங்க.

ஏன் எம்.சி.ஏ படிக்க வேண்டியது தானே, படிக்காம வர வேண்டியது அப்பறம் இங்க வந்து வேல கெடைக்கலனு ஓவர் பீட்டர் வுட வேண்டியது அப்படினு கேப்பீங்கனு எனக்குத் தெரியும். நானும் எம்.சி.ஏ படிக்கலாம் அப்பறமா ஏதாவது வேல கெடைக்குதானு பாக்கலாம் அப்படினுதான் நெனச்சேன், ஆனா பி.எஸ்.சி படிக்கும்போதே சும்மா இருக்காம கிளாஸ்-ல முந்திக்கொட்ட தனமா ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பேன். அப்புறம் லாங்வேஜ்னு இருக்கே PASCAL, C, C++ அதுல கொஞ்சம் புரோகிராமும் எழுதிப்புட்டேன். உண்மையா சொல்றேங்க இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா புரோகிராம்லா எழுதியிருக்கவே மாட்டேன். அதுல C, C++ கொஞ்சம் ஆர்வக்கோளாறு ஆயிப்போச்சு. அது, அந்த சப்ஜெக்ட் வாத்திக்கும், எச்.ஓ.டி-க்கும் புடிக்கல போல, கிளாஸ்ல வந்து, நல்லா புரோகிராம் எழுதறான் இவன் ரொம்ப நல்லவண்டா அப்படினுட்டாங்க. இதுதான் டைம்னு நம்ம பசங்களும் நம்மள உசுப்பேத்தி விட்டுட்டாங்க. அதோடயாவது விட்டிருக்க்லாம், விட்டாங்களா? ம்ஹும்.. விடலையே...

நீ, பி.ஜி எல்லாம் பண்ண வேண்டாம், யூ.ஜி முடிச்சுட்டு வேல தேடிகிட்டு அப்புறம் பி.ஜிய கரஸ்ல பண்ணு அப்படினுட்டாங்க. அத நெனச்சுக்கிட்டு நானும் கொஞ்சம் ஓவராவே போய்ட்டேங்க. ஆமாங்க பி.ஜி பண்ணாம இப்படியே ஆணி புடுங்க போலாம் அப்படினு கெளம்பி வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லா பயலுவலும், ஆணி புடுங்க போனா இங்கிலிபீசுல தான் பீட்டருவுடனும் அப்படிங்கரானுவ. நமக்கு ஏற்கனவே இங்கிலீசு சுட்டுபோட்டாலும் வராது, ஏன்னா நாமதான் பக்காவான தமிழனாச்சே. (ஆனா ஒரு மேட்டரு பாருங்க நா 1-வது படிக்க போனப்பவே உங்க அம்மா, அப்பா பேரு என்னானு கேட்டதுக்கு அம்மா பேரு மம்மி, அப்பா பேரு டாடி அப்படினு சொன்னவன். அதவச்சு ஊருக்குள்ள நம்ம பேரே மம்மிடாடி ஆகிபோச்சு. சரி மேட்ட்ருக்கு வருவோம்).

சரி எப்படியாவது ஆணி புடுங்க போய்ரனும்டா அப்படினு நானும் வேல தேட ஆரம்பிச்சேன். ஆனா ஒன்னும் ஒத்துவரல. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், நம்ம டாட் நெட் படிக்கலாம் அப்படினு படிக்க ஆரம்பிச்சேன். அந்த டைம்ல ஒரு கம்பெனில தகவல் தேடர வேலைல(வெப் ரிசர்ச்சர்) சேர்ந்துட்டேன். அதுல இருந்து கொஞ்சம் முன்னேறி, ஆணி புடுங்க ஆரம்பிச்சு இப்போ போய்கிட்டு இருக்கு.....

நீ நல்லவனில்லை

நீ நல்லவனில்லை
என்னை மன்னித்துவிடு.
நீ
நல்லவனில்லை என்பது
எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றி
நீ
என்ன நினைத்தாலும்
உண்மையை
உள்ளபடியே கூறப்போகிறேன்.

உன்னுடையதா
இந்த சமூகமா
இல்லை பருவமா
யாருடைய தவறு என்று
சரியாகத் தெரியவில்லை...

பெண்ணை
பெண்ணாக அல்லாமல்
போதையாகவும்
காமமாகவும்
பார்க்கும் கண்கள்...

பார்க்கும் நொடியிலேயே
என் முகம் தொடங்கி
செவ்விதழ்
கழுத்து
மார்பு
இடை
முழங்கால் என
பாதம் வரை மேய்ந்துவிடுகிறது
உன் கழுகுப் பார்வை...

இதில் எப்படி,
என்னை மட்டும் நீ
பெண்ணாக பார்ப்பது.

உன்னைப் பற்றி
முழுமையாக தெரியாவிட்டாலும்
இதையாவது தெரிந்துகொண்டேன்.

எனக்குத் தெரியும்
நீ நல்லவனில்லை...